murasoli thalayangam
“தீவிரவாதத்துக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” : முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (10-05-2025)
தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்க...
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் மாவட்டம், பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கர தீவிரவாதிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 உயிர்கள் கொல்லப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த இரக்கமற்ற கொடூரமான பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் மீது கடுமையான தாக்குதலை இந்திய ராணுவம் தொடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த ஏப்ரல் 24 பொதுமக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமான தண்டனையைப் பெறுவார்கள்” என்றார்.
தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டிய இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடைநிறுத்தி வைத்ததுடன், அட்டாரி–வாகா எல்லையை மூடியது. இரு நாட்டுத் தூதரகங்களில் பணியாற்றிய அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியது. பாகிஸ்தானிலிருந்து அனைத்து விதமான இறக்குமதிகளையும் இந்தியா தடை செய்தது. அதேபோல பாகிஸ்தானும், இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் செயல்படுத்தப்படும் எல்லா விமானங்களுக்கும் தன் வான்வெளியில் அனுமதி மறுத்தது. சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் SAARC விசா தள்ளுபடி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விசாக்களை நிறுத்தி வைத்த பாகிஸ்தான், அவை ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றது. இதைத் தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் எல்லை பதற்றத்துக்குரிய பகுதியாக மாறியது.
“பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம், தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகள் எடுக்கலாம்” என்று பிரதமர் மோடி அறிவித்தார். இது போன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்பதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்த நாடு தனது தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
கடந்த 7 ஆம் தேதியன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம் தொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் உள்ள 15 நகரங்களைக் குறி வைத்தது பாகிஸ்தான். ஏவுகணைகள், டிரோன்களை அனுப்பியது. இதனை இந்திய ராணுவம் வானில் முறியடித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை நோக்கி, இந்தியா தனது தாக்குதலை நடத்தியது. லாகூர் வான்பாதுகாப்பு அமைப்பு சிதைக்கப்பட்டது. பாகிஸ்தானின் 4 விமானங்களை இந்தியா வீழ்த்தி உள்ளது. போர் தொடர்ந்து வருகிறது. இந்த போர்ச் சூழல் எப்போது நிற்கும் என்பதை இப்போது கணிக்க இயலாது.
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள், தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்கும் வகையில் அமைய வேண்டும். பஹல்காம் பகுதியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததை மறைக்க இவை நடத்தப்பட்டு விடக் கூடாது. மக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கை உயர்த்துவதற்காக இது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
2016 ஆம் ஆண்டும் இதே போன்ற தாக்குதல் நடைபெற்றது. இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜம்மு காஷ்மீர் உரியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது. 2019 ஆம் ஆண்டும் இதே போன்ற தாக்குதல் நடந்துள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படை மீது புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது போர் விமானங்கள் மூலமாக இந்தியா தாக்குதல் நடத்தியது. இவை எல்லாம் தீவிரவாதத்துக்கு, பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. பத்து நாள் பதற்றமாகவே முடிந்துவிட்டது. ஆனால் தீவிரவாதிகள் நிரந்தரப் பதற்றத்தை தக்கவைத்தே வருகிறார்கள்.
“இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியும் நிதி உதவியும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசீப் பேட்டி அளித்துள்ளார். இதனை தாங்கள் செய்வதற்கு உலகின் எந்த நாடுகள் எல்லாம் தங்களுக்கு உதவி செய்தது என்றும் அவர் சொல்லி இருக்கிறார். இதனை ஒன்றிய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
தீவிரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தான் ஆதரவு என்பது ஒருகூறு மட்டுமே. இன்னும் அதற்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன.
எனவே, தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்கத் தேவையானதை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். இவ்வளவு பதற்றமான சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்றைய தினம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இதற்கு முன்பு நடந்த கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போர் பெருமையைத் தனிச் சொந்தம் கொண்டாட நினைக்காமல் தீவிரவாதத்துக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதில் காட்டவும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!