murasoli thalayangam
“திராவிடக் காளை ஆட்சி நடக்கிறது! பாவேந்தரின் மாட்சி பரவுகிறது!” : முரசொலி தலையங்கம்!
தமிழ் மொழிக்கு பாவேந்தர் - திராவிட இயக்கத்தின் புரட்சிக்கவிஞர் - தமிழினத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் போற்றும் வகையில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் உருவாக்க வேண்டும். கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும் என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்" என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
தமிழாட்சி - தமிழினத்தின் ஆட்சி - நடந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும். 'வள்ளுவருக்கு அடுத்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத்தான் வைக்க வேண்டும்' என்று சொன்னவர் தந்தை பெரியார். பாவேந்தரின் பாடல்களை முதலில் திரட்டி, முதல் தொகுப்பை 1937 ஆம் ஆண்டே கொண்டு வந்தவர் குத்தூசி குருசாமி.
1928 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் பாவேந்தர். 1938 இந்தி எதிர்ப்பு பேரியக்கத்துக்கு பாவேந்தர்எழுதித் தந்த பாட்டே போர்ப்பாட்டு ஆனது. "பாரதிதாசன் கவிதைகள் என்னும் புத்தகம் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாகும். தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்கு புதியவரல்ல. அவர் சென்ற 10 ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார்.
அவர் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி. இந்த ஒரு காரணத்தினாலேயே அவர் இன்று தமிழ்நாட்டின் சிறந்த கவியாயிருந்தும் அவருடைய புகழ் போதுமான வரையில் பரவாமல் இருக்கிறது. ஆனால் அவர் மட்டும் வெறும் புகழை விரும்பினார் ஆனால் காலத்திற்கும் பாமர மக்கள் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு தம் கருத்துக்களை மாற்றிக் கொண்டு மிகச் சிறந்த கவி என்ற பெயரை எளிதில் பெற்றுவிடலாம். ஆனால் உண்மை நியாயம், அறிவு முதலியவற்றைச் சிறிதும் விற்றுக் கொடுக்க இசையாத இயற்கையான ஒரு பிடிவாத முடையவராதலால் அவர் புகழை எதிர்பாராமல் தம் கொள்கைகளில் விடாப்பிடியாய் இருந்து வருகிறார். இக்குணத்தை நான் அவரிடம் பல தடவைகள் கண்டிருக்கின்றேன்" என்று அந்நூலுக்கு எழுதிய மதிப்புரையில் குறிப்பிட்டார் தந்தை பெரியார்.
"ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கீழ்நோக்கிச் சென்று கொண்டி- ருந்த தமிழகத்தை நன்னிலை நோக்கி நடத்தக் கிடைத்த தலைவர் ஒருவரே, அவர் தாம் நம் பெரியார்.." என்று எழுதினார் பாவேந்தர்.
'தொண்டு செய்து பழுத்த பழம் - தூய தாடி மார்பில் விழும் - மண்டைச் சுரப்பை உலகு தொழும் அவர் தாம் பெரியார்' என்று எழுதினார் பாவேந்தர் பாரதிதாசன். நூற்றாண்டு உழைப்பை பத்தேவரியில் சொன்னவர் பாவேந்தர்.
1942 ஆம் ஆண்டு 'திராவிடநாடு' இதழை பேரறிஞர் அண்ணா தொடங்கினார். முகப்பில்,'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற பாரதிதாசன் வரிகள்தான் எழுதப்பட்டது. பாவேந்தருக்கு நிதி திரட்டி அளித்தவர் பேரறிஞர் அண்ணா.1941 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' தொடங்கினார் தலைவர் கலைஞர்.
தமிழ் மாணவர் மன்றத்தில் ஆண்டு விழாவுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்பா உணர்ச்சிக் கவியாக அமைந்தது."தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்காண்" என்று தொடங்கும் கவிதை, "கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை" என்று முடியும். இப்படி தமிழ்ச் சிங்கக் கூட்டத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியவை பாவேந்தரின் கவிதைகள்.
அவரது ஒவ்வொரு வரியும், ஓராயிரம் பேரை உணர்ச்சி கொள்ள வைத்திருக்கும். வரிக்கு வரி, வரிப்புலி வார்த்தைகளை வடித்துத் தந்தவர் பாவேந்தர். “இவனொரு சுருட்டுக் கவிஞன் - புகைச் சுருட்டுக் கவிஞன் - இவன் புரட்டுக் கவிஞனாவான்; மூடப்பழக்கமெல்லாம் தலைகீழாபுரட்டும் கவிஞனாவான்.
கருத்துக் கவிஞன்; சற்று கருத்த கவிஞன்.காலக் கவிஞன் ; முக்காலக் கவிஞன்" என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்.இப்படி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரையும் ஈர்த்தவர் பாவேந்தர். பாவேந்தர் என்றால் தமிழியக்கம். தமிழியக்கம் என்றால் பாவேந்தர்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு" என்று முழங்கியவர் புரட்சிக்கவி. திராவிடம் - தமிழம் ஆகிய இரண்டும் ஒரே பொருள் தரும் இருவேறு சொற்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொன்னவர் பாவேந்தர்.
“திராவிடத்தின் தீமை எலாம்திராவிடரின் தீமை என்கதிராவிடத்தின் நலமெல்லாம்திராவிடரின் நலமென்க” என்றவர் அவர். "திராவிடத்தை மீட்பீர் - நம் செந்தமிழை மீட்பீர்" என்று சேர்த்துச் சொன்னார் பாவேந்தர்.அத்தகைய பாவேந்தர் பெயரால் ஒருவார காலம் தமிழ் வார விழா நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த அரசாணை, தமிழாணை ஆகும். 'தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்' என்ற பாவேந்தரின் கனவு நனவாகிய காலமாக இது அமைந்துள்ளது.
"கோட்டை நாற்காலி இன்றுண்டு நாளை கொண்டுபோய் விடுவான் திராவிடக் காளைகேட்டை விசாரித்துத் திராவிடர் கொள்கையைச்கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை" என்று எழுதியவர் பாவேந்தர். அத்தகைய திராவிடக் காளை ஆட்சி நடக்கிறது. பாவேந்தரின் மாட்சி பரவுகிறது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!