murasoli thalayangam
”உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக்கும் வேறுபாடு தெரியாத பிரதமர்” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
முரசொலி தலையங்கம் (09/04/2025)
அது அழுகை அல்ல!
‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்' என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. ‘எவ்வளவு கொடுத்தாலும்...' என்று சொல்லும் அவர் எவ்வளவுகொடுத்தோம் என்பதைப் பட்டியல் போட்டிருந்தால் பாராட்டலாம். எதுவும் கொடுக்காத நிலையில் அவரால் எப்படி பட்டியல் போட முடியும்? தமிழ்நாடு எழுப்புவது அழுகை அல்ல, உரிமை. உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக்கும் வேறுபாடு தெரியாதவர் இந்திய நாட்டின் பிரதமராக அமர்ந்திருப்பது இந்தியாவுக்குத் தலைகுனிவு ஆகும்.
*மூன்று இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. மாநில அரசு கோரிய 37,986 கோடி ரூபாய். இதில் எவ்வளவு நிதியைக் கொடுத்துள்ளேன் என்று பிரதமர் சொன்னாரா? இல்லை!
*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான நிதியான ரூ.2152 கோடியைக் கொடுத்துவிட்டேன் என்று பிரதமர் சொன்னாரா? இல்லை!
*சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்காகரூ.60 ஆயிரம் கோடியில் பாதியைக் கொடுத்து விட்டேன் என்று சொன்னாராபிரதமர்? இல்லை!
*தமிழ்நாடு வரியாகக் கொடுப்பதில் பாதிக்கும் மேல் தமிழ்நாட்டுக்கு தந்துவிட்டேன் என்று சொன்னாரா பிரதமர்? இல்லை!
*தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன், வாருங்கள் அந்த கம்பீரமான கட்டடத்தைக் காட்டு கிறேன் என்று அழைத்தாரா பிரதமர்? இல்லை.
எந்தச் சாதனையையும் சொல்லாமல், ‘மூன்று மடங்கு கொடுத்தோம்', ‘ஏழு மடங்கு கொடுத்தோம்', ‘பத்து மடங்கு கொடுத்தோம்' என்று வாயால் வடை சுட்டுவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர்.
ஒன்றிய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் திட்டங்ககளுக்கும் தமிழ்நாடு அரசுதான் நிதி அளித்து வருகிறது. எத்தனையோ லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததாக பிரதமர் சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் (Ja1 Jeevan Mission) என்ற திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்வழங்கவேண்டிய 4,142 கோடி ரூபாயில், 732 கோடிரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது.
நிதியின்மையினால் திட்டங்களின் செயல்பாடு சுணங்கக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு நிதியை கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறதுஎன்பது பிரதமருக்குத் தெரியுமா?
ஒன்றிய அரசின் சார்பில் வீடு கட்டித் தருவதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசின் திட்டமான பிரதமர் நகர்ப்புர வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY-U), கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, 2816 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, 1.5 இலட்சம் ரூபாயாகவே இருக்கிறது. இத்திட்டத்தினைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசானது, வீடுஒன்றிற்கு 12 முதல் 14 இலட்சம் ரூபாயை தன் சொந்த நிதியின் மூலம் மானியமாகக் கொடுத்து, ஏழ்மை நிலை- யில் இருக்கும் மக்களின் சொந்தவீட்டிற்கான கனவினை நிறைவேற்றி யுள்ளது. இதனை பிரதமர் அறிவாரா?
ஒன்றிய அரசின் பிரதமர் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY- G) கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, வீடு ஒன்றிற்கு 0.72 இலட்சம் ரூபாயாக, எட்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு, வீடு ஒன்றிற்கு 1.72 இலட்சம் ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், மாநில அரசின் மானியமானது 3.53 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது, ஒன்றிய அரசு தன்னுடைய திட்டத்திற்கு வழங்கும் மானியத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம். இதனை பிரதமர் அறிவாரா?
திட்டம் தான், ஒன்றிய அரசின் திட்டம். ஆனால் அதற்கும் நிதி தருவது தமிழ்நாடு அரசு. ‘அவருக்குத் தான் கல்யாணம், ஆனால் சட்டை என்னுடையது' என்பது போல 'செந்தில் காமெடி'யோடு ஆட்சி நடத்துவது யார்?
‘ இந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டால் தான் இரண்டாயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் - பத்தாயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் போட மாட்டோம் . இரண்டாயிரம் கோடி பணத்துக்காக இன்று கையெழுத்துப் போட்டால் - இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கி இந்த தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்” என்று சொன்னார். இந்தியாவில் இப்படி எந்த முதலமைச்சரும் பேசி இருக்க மாட்டார்கள். இது அழுகையா? உரிமையா? பிரதமருக்குச் செய்யப்பட்ட எச்சரிக்கை அல்லவா இது? இது கூடப் புரியவில்லையா?
தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்குஒன்றிய அரசானது, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனை களை விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவதோடு மட்டு- மல்லாமல், அத்திட்டங்கள் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இதைச் செய்யாதீர்கள் என்று சொல்வது உரிமையா? அழுகையா?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் சொன்னார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை- என்றார்.
இதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய விளக்கம்...
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர்,...
ஆட்சியை அழிக்கும் படைக்கருவி - என்பது ஆகும். இதனை இந்தியில் மொழி பெயர்த்து பிரதமர் அறிந்து கொள்ளட்டும்.
Also Read
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!
-
“நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!
-
“தமிழ் மக்கள் ரூ.1,000க்கு ஆசைப்படவில்லை, விடியலுக்கு ஆசைப்பட்டார்கள்!” : கனிமொழி NVN சோமு பதிலடி!
-
ஜெயலலிதா செய்ததும் பழனிசாமியின் கருத்துப்படி சதிச் செயலா? : சரமாரியாக கேள்வி எழுப்பும் முரசொலி!
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !