murasoli thalayangam
“ஆணவ கொக்கரிப்பு.. இவ்வளவு அதிகாரம் யார் கொடுத்தது?” - ஒன்றிய அமைச்சரை வெளுத்து வாங்கிய முரசொலி!
முரசொலி தலையங்கம்
12.03.2025
தர்மேந்திர பிரதானின் ஆணவம்!
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முழுமூச்சுடன் எதிர்க்கும் தமிழ்நாட்டைப் பார்த்தால் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஆத்திரம் வருகிறது. ஆணவத்தால் கொக்கரிக்கிறார். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்குரல் கொடுத்த பிறகு தான் மன்னிப்புக் கேட்டு மண்டியிடுகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அராஜகவாதிகளாம், ஜனநாயகப் பண்பு இல்லையாம். இப்படி சொல்வதற்கான எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை. யாரோ ஒரு சூப்பர் சி.எம்.பேச்சைக் கேட்டுக் கொண்டு பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை என்று கிசுகிசு பாணி அவதூறை நாடாளுமன்றத்தில் கூச்சமில்லாமல் சொல்லி இருக்கிறார் பிரதான்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, தர்மேந்திர பிரதானின் உச்சந்தலையில் கொட்டுவதைப் போல அமைந்துள்ளது.” தன்னை மன்னர் என எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! “ என்று எச்சரித்துள்ளார் முதலமைச்சர். நிதி தர முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் ஆணவத்தால் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார் தர்மேந்திர பிரதான். அவருக்கு இவ்வளவு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? இவர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் காலத்தில் தான் நீட் தேர்வில் எல்லா முறைகேடுகளும் நடந்துள்ளது. அதற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் அவருக்கு வைத்த பேராவது பொருத்தமானதாக இருந்திருக்கும்.
நீட் தேர்வில் அதிகளவு முறைகேடு நடந்துள்ளது என்பதை அசாம் மாநில பா.ஜ.க. அரசு நேற்றைய தினம் ஒப்புக் கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இனி அரசு தேர்வு மையங்களில் மட்டும்தான் நீட் தேர்வு நடக்கும் என்றும் அம்மாநில அரசு சொல்லி இருக்கிறது. இது தர்மேந்திர பிரதானுக்குத் தெரியுமா?நீட் தேர்வு மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது, இந்த முறைகேடுகள் அனைத்தும் வடமாநிலங்களில்தான் நடந்துள்ளன. இவையெல்லாம் அநாகரிகம் அல்லவா? தர்மேந்திரபிரதானுக்கு இவை கல்வித் துறையில் ஏற்பட்ட களங்கமாகத் தெரியவில்லையா?
“இரண்டாயிரம் கோடி பணத்துக்காக இன்று கையெழுத்துப் போட்டால் இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கி இந்த தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்” என்று சொன்னவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இப்படி ஒருவர் சொன்னால், அந்த திட்டத்தில் என்ன மாதிரியான தவறுகள் இருக்கிறது என்று ஒன்றிய அரசு சிந்தித்திருக்க வேண்டும். ஆய்வு நடத்தி இருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசின் அமைச்சரையோ, அதிகாரிகளையோ அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல், முதலில் ஆதரித்தார்கள், கையெழுத்துப் போட வந்தார்கள், பின்னர் யாரோ தடுத்து விட்டார்கள் என்று கதை விடுகிறார் பிரதான்.
பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை ஏற்காவிட்டால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்காக பல ஆண்டுகளாக தரும் நிதியை நிறுத்திவிடுவோம் என்பது ஆணவம் அல்லவா?
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பி.எம்.ஸ்ரீ. திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு ஒன்றிய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் பின்னர் ‘யு டர்ன்' அடித்து விட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினைசெய்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார். இது தவறான தகவல்கள் ஆகும்.
Pradhan Mantri Schools For Rising India - என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப் போவதாகச் சொல்கிறார்கள். புதிதாக பள்ளிகளைக் கட்டப் போவது இல்லை. ஏற்கனவே இருக்கும் பள்ளிகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அதை மட்டும் கவனிக்கப் போகிறார்கள். அதாவது இங்கே ஒரு அரசு பள்ளியை எடுத்து அதனை ஒன்றிய அரசின் பள்ளியாக மாற்றப் போகிறார்கள். அதில் மும்மொழிக் கொள்கையை திணிப்பார்கள். 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவார்கள். மாணவர்களை வடி கட்டி பாதியில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். மாணவர்களின் இடைநிற்றல் 16 விழுக்காடாக இருந்ததை 5 விழுக்காடாக குறைத்திருக்கிறது தி.மு.க. அரசு. இந்தப் பள்ளிகள் வந்தால், இடைநிற்றல் அதிகம் ஆகிவிடும். நாடாளு மன்றத்தில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யும் போது இதனைச் சொல்லவில்லை. 2023 கடைசியில்தான் இதைச் சொல்லி நிபந்தனைகள் போடத் தொடங்கினார்கள்.
* பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று சொல்லவில்லை. ”பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படை யில் முடிவுகள் எடுப்போம்” என்று தான் 2024 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
* ஒன்றிய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 'NEP 2020 அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை திருத்துங்கள். திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றால் கையெழுத்து போடுகிறோம், இல்லையென்றால் முடியாது” என்று 2024 ஜூலை மாதம் மீண்டும் கடிதம் எழுதியது தமிழ்நாடு அரசு.
* ஒப்பந்தத்தை திருத்தும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு இல்லை என்று 2024 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதினார்.
“திருத்தவில்லை என்றால் ஏற்க முடியாது' என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லிவிட்டார்.
- இது தான் நடந்தது. தர்மேந்திர பிரதான் சொல்வது முழுப்பொய் என்பது இதன் மூலம் தெரிகிறது அல்லவா? இந்தப் பொய்யை மறைக்கத்தான் தமிழ்நாட்டையும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் தர்மேந்திர பிரதான். இதற்கு பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டுக்கு வாக்குக் கேட்டு வந்தவர், வரப்போகிறவர் அவர்தான். தர்மேந்திர பிரதான் அல்ல.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!