murasoli thalayangam

இந்தி திணிப்பு : “எல்லாப் படையெடுப்புகளையும் தமிழ்நாடு தடுக்கும்...” - முரசொலி !

முரசொலி தலையங்கம்

18.02.2025

பிளாக்மெயில் கவர்மெண்ட் !

பேசும் இடம் காசி தமிழ்ச் சங்கமம். ஆனால் செய்யும் செயல், தமிழின் கழுத்தை நெரிக்கும் செயல். காசி தமிழ்ச் சங்கமத்தில் வைத்து தமிழை மொத்தமாகக் கை கழுவி விடப் பார்க்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, உதவாக்கரைக் கூட்டத்தில் ஒரு மந்திரி ஆகிவிட்டால் தன்னை ஏதோ மன்னரைப் போல நினைத்துக் கொள்கிறாரா தர்மேந்திர பிரதான்?

"மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு ஏற்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டுக்கு நிதி நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை" என்று ஆணவமாகச் சொல்லி இருக்கிறார் தர்மேந்திரப் பிரதான்.

'நீட்' என்ற ஒரு தேர்வை சர்ச்சை இல்லாமல் நடத்த முடியாத தர்மேந்திர பிரதான் எல்லாம் இந்த நாட்டில் கல்வி அமைச்சராக இருப்பது இந்த நாட்டுக்கு அவமானம் இல்லையா? 'நீட்' தேர்வில் அதிகப்படியான முறைகேடுகள் நடைபெற்றது இவரது காலத்தில்தான் என்பதுதான் இவருக்கு உள்ள 'பெருமை' ஆகும்.

நாடாளுமன்றத்தில் பேசும் போது, 'நீட் தேர்வில் எந்த தவறும் நடை பெறவில்லை' என்று முதலில் சொன்னார். பின்னர், 'தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பேன்' என்று சொன்னார். உச்சநீதிமன்றத்திலேயே மாற்றி மாற்றிச் சொன்னார். இவர்தான் இன்று தமிழ்நாட்டை மிரட்டுகிறார். இதுதான் காலத்தின் கோலம் என்பது. மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது? என்பதைச் சொல்வாரா அமைச்சர்?

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போலத் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டி இருக்கும்* என்று எச்சரித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒன்றிய அமைச்சரின் மிரட்டலைக் கண்டித்து தமிழ்நாட்டில் இருக்கும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு 2, 152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தர வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததால் இந்த நிதி கிடையாது என்று சொல்கிறார்கள். இவர்கள் கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கைகளுக்கான இலக்கை தமிழ்நாடு எப்போதோ எட்டி விட்டது. தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைத்தான் ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டுமே தவிர, நாம் அவர்களிடம் இருந்து பின்பற்றுவதற்கு என்ன இருக்கிறது? பயிற்று மொழிக் கொள்கையாக தமிழ்நாடு பின்பற்றுவது தமிழ்நாடு அரசின் சட்டத்தைத்தானே தவிர, வேறல்ல. இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம். தமிழும், ஆங்கிலமும்தான் நமது இருமொழிக் கொள்கை என்றும் இந்திக்கு இடமில்லை என்பதுதான் அந்தச் சட்டம்.

சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 1968 சனவரி 23 அன்று முதல்வர் அண்ணா கூட்டினார். அதில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும், மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கி விட இப்பேரவை தீர்மானிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திக்கு தரப்பட்டுள்ள சிறப்பு நிலை நீக்கப்பட வேண்டும் என்றும்; இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளுக்கும் சமநிலை வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் பிற மொழிகளுக்குக் குறைவான நிலை தரப்பட்டுள்ளப் பிரிவுகளைத் திருத்த வேண்டும் என்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது" என்று சொல்லப்பட்டது.

தாய்மொழியாகிய தமிழ், உலகத்துக்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது. 2895ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழி- வகை செய்யப்பட்டுள்ளது.

எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து அவர்தம் தாய் மொழியையும் விருப்பப் பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதில் என்ன குறையைக் கண்டார் தர்மேந்திர பிரதான்? அவர் சொல் வதைப் போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை செயல்பாட்டில் இல்லை. இந்தி பேசும் பல மாநிலங்களில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவது இல்லை. ஆங்கில வகுப்புகளை நடத்துவது இல்லை. இது இந்தியாவின் கல்வி அமைச்சர் அறிவாரா?

எல்லாவற்றையும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கொட்ட வேண்டும்? எல்லாவற்றையும் கொண்டு வந்து தமிழ்நாட்டின் மீது ஏன் திணிக்க வேண்டும்? எல்லாப் படையெடுப்புகளையும் தமிழ்நாடு தடுக்கும். அரசியல் ரீதியாக தி.மு.க. - பா.ஜ.க.வுக்கான மோதல் அல்ல இது. தமிழர் பண்பாட்டின் மீது பா.ஜ.க. தனது பாசிசப் போரைத் தொடங்கி இருக்கிறது. நாம் ஜனநாயகப் போர்க்களத்தில் இதுவரை வென்றதைப் போலவே வெல்வோம்.

Also Read: பிரிவினையின் மூலமே 'சமஸ்கிருதம்', அது இந்தியாவின் மூலம் அல்ல - பாஜகவினருக்கு பாடம் எடுத்த முரசொலி !