முரசொலி தலையங்கம் (17-02-2024)
சம்ஸ்கிருத மயம் ஆக்குதல்
மக்களவை நடவடிக்கைகள் சமஸ்கிருத மொழியிலும் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சொல்லி இருக்கிறார். யாருக்குப் புரியும், எத்தனை பேர் அறிவார்கள் என்பதையும் அவர் சொல்லி இருந்தால் பாராட்டலாம். அதையே சமஸ்கிருதத்தில் சொல்லி இருந்தால் பாராட்டு விழா கூட ஓம் பிர்லாவுக்கு எடுக்கலாம்.
மக்களவையில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதியன்று கேள்வி நேரம் முடிந்த உடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “மக்களவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அதன் மொழிபெயர்ப்புகள் உடனுக்குடன் பல்வேறு மொழிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மொழிகளின் பட்டியலில், டோக்ரி, போட்டோ, மைதிலி, மணிப்பூரி, சமஸ்கிருதம், உருது ஆகிய ஆறு மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த மொழிகள் மூலமும் உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில் விளக்கம் கிடைக்கும்” என தெரிவித்தார். இதற்கு உடனடியாக தி.மு.க. சார்பில் தான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மக்களவை மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதம் இருப்பதற்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உறுப்பினருமான தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அந்த மொழி தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 73,000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள். உங்கள் ஆர். எஸ். எஸ். சித்தாந்தத்தால் வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இப்படி ஒரு எதிர்வினையை ஓம் பிர்லா எதிர்பார்க்கவில்லை.
சமஸ்கிருதம் லட்சக்கணக்கானவர்களால் பேசப் படுகிறது என்றோ, இந்த அவையில் இருக்கும் பத்துப் பேருக்கு சமஸ்கிருதம்தான் தெரியும் என்றோ, மூன்று மாநிலங்களில் அது ஆட்சி மொழியாக இருக்கிறது என்றோ ஓம் பிர்லா சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கற்பனையான காட்சிகளை விவரிக்கிறார் அவர்.
“நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்? இது பாரதம். பாரதத்தின் மூல மொழி எப்போதும் சமஸ்கிருதம்தான். அதனால்தான், சமஸ்கிருதம் மட்டுமல்ல, 22 மொழிகளையும் குறிப்பிட்டோம். சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் ஆட்சேபனைகளை எழுப்பினீர்கள்? இந்தியாவில் 22 மொழிகள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் மற்றும் இந்தி உட்பட அந்த 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் விவாதங்கள் நடைபெறும்.” என்று கூறி இருக்கிறார் ஓம் பிர்லா
பாரதத்தின் மூல மொழி என்று ஓம் பிர்லா எப்படிச் சொல்கிறார்? எந்த ஆய்வின் அடிப்படையில் சொல்கிறார்? அப்படி உலகம் ஏதாவது ஒப்புக் கொண்டிருக்கிறதா?
ஆர். எஸ். எஸ். வாதிகளின் மூலத்தத்துவம் சமஸ்கிருதம் என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறோம். இந்திய நாட்டை சமஸ்கிருத மயம் ஆக்கப் போகிறோம் என்று சொல்லுங்கள். உங்கள் நோக்கத்தை வெளிப்படையாக விமர்சிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் பாரத நாட்டின் மூல மொழி சமஸ்கிருதம் என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை அல்ல. சனாதன சக்திகள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சமஸ்கிருதத்தை மூலமாகப் பயன்படுத்துகின்றன.
ஜாதியால் வர்ணத்தால் பிரிக்கப்பட்டுள்ளார்கள் மக்கள் என்பதற்கு மூலமாக சமஸ்கிருதம் இருக்கலாம். கோடிக்கணக்கான மக்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கியதற்கு மூலமாக இருப்பது சமஸ்கிருதம்தான். சமூகத்தின் சரி பாதியான பெண்களை உரிமையற்ற பதுமைகளாக ஆக்குவது சமஸ்கிருத சூத்திரங்கள்தான். கடவுளுக்கு உகந்த மொழியாக சமஸ்கிருத்தை உருவகம் செய்து, மற்ற மொழிகளை தாழ்த்தியது இந்த மேலாதிக்கம்தான். எனவே பிரிவினையின் மூலம் 'சமஸ்கிருதம்' என்று சொல்லலாம். இந்தியாவின் மூலமாகச் சொல்ல முடியாது. சட்டத்தை சமஸ்கிருதம் ஆக்குவது. திட்டத்தின் பெயரை சமஸ்கிருதம் ஆக்குவது. இதுதான் அவர்களது திட்டம்.
புதிய கல்விக் கொள்கையே சமஸ்கிருதக் கல்விக் கொள்கைதான். "இந்தியச் செவ்வியல் / செம்மொழிகளின் முக்கியத்துவம், தொடர்பு மற்றும் அழகியல் போன்ற காரணிகள் புறந்தள்ளப் பட்டுவிடக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது வரைவில் குறிப்பிடப் பட்டுள்ளதும் மற்றுமொரு முக்கியமான நவீன மொழியுமான சமஸ்கிருதம் -- ஒன்று கூட்டப்பட்ட கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதாகவும், கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக் கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பிற ( சமஸ்கிருத ஞான மரபு என்றறியப்பட்ட) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும், மதச்சார்புடையவர்களாலும் வாழ்வின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கி உள்ளது.
எனவே சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.
இந்த மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாகக் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்க்ரித மொழியின் மூலமே கற்பிக்கப்படும்” என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இதனால்தான் அந்தக் கொள்கையை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
அவர்கள் புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கக் காரணமும் சமஸ்கிருத மேலாண்மையை நிறுவுவதற்குத்தான். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமல்ல. அவர்களுக்கு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழி ஆக்குவதுதான் இறுதி இலக்கு ஆகும். சமஸ்கிருதம் ஆட்சி மொழி என்றால் அடிக்க வருவார்கள். அதனால் இந்தியை முதலில் சொல்கிறார்கள். இந்தியை உட்கார வைத்து விட்டு சமஸ்கிருதத்தை பின்னர் எடுத்துவரும் தந்திரம்தான் இது.