murasoli thalayangam

ரயில் பாதை விவகாரம் : “இதெல்லாம் ஒரு பிழைப்பா?” - அண்ணாமலை, பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி !

வதந்தியை வாழாதே !

“மதுரை - தூத்துக்குடி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிடும்படி ஒன்றிய அரசிடம் சொன்ன தமிழ்நாடு அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்” - என்று ‘சுய சாட்டையடி’ அண்ணாமலை ‘வதந்தி’ கிளப்பினார்.

கரடியே காறித் துப்பிடுச்சு என்று சொல்வதைப் போல அண்ணாமலைக்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து விட்டார். ‘மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடக் கோரியதாக வெளியான செய்தி தவறானது’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.அண்ணாமலை தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ம் தேதி, சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழ்நாடு அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது” எனக் கூறியதாக செய்திகள் வெளியானது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, விளக்கமும் அளிக்கப்பட்டது.

“மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டத்தைதுரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது” என்று தமிழ்நாடுபோக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்திருந்தார்.

உடனே பா.ஜ.க. அண்ணாமலை போராட்டமே அறிவித்தார். தமிழ்நாட்டின் அனைத்துத் திட்டங்களுக்கும் முழுமையாக நிலத்தைக் கைப்பற்றவில்லை என்றும், தி.மு.க. அரசு நத்தை வேகத்தில் செயல்படுகிறது என்றும், இதனால் அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சி தடை படுவதாகவும், இதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து போராடப் போவதாகவும் அறிவித்தார் அண்ணாமலை.

இந்த தகவல் ஒன்றிய அமைச்சருக்குப் போனதும் அண்ணாமலை கருத்தை அவரே மறுத்துவிட்டார். மதுரை- தூத்துக்குடி திட்டத்தில் தமிழ்நாடு அரசிடமிருந்து நிலம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்தி இருகிறார். ரயில்வே அமைச்சர் ஏன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வாறு கூறினார் என்பது குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றையும் ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது.

“கடந்த ஜனவரி 10 அன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி தனித்தனியாக கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டனர். இதனால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது. அப்போது ஒரு செய்தியாளர் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி கேட்டார். ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது அமைச்சர் காதில் தனுஷ்கோடி என்று பதிவானது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார். ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் அமைச்சருடைய பதில் தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு என தவறான தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு எந்த விதமான நில எடுப்புப் பிரச்சினையும் இல்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு செய்தி வெளியானதும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்துவிட்டு அறிக்கை கொடுப்பதோ, போராட்டம் நடத்துவதோதான் ஒரு தலைவருக்கு அழகு. அண்ணாமலை தலைவரல்ல என்பதைத்தான் தினந்தோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரது கட்சியின் ஆட்சிதான் ஒன்றியத்தில் நடக்கிறது. உடனடியாக ஒன்றிய அமைச்சரிடம் கேட்டிருக்கலாம். அதைச் செய்யவில்லை அண்ணாமலை. உடனடியாக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துவிட்டார்.

பா.ஜ.க. அண்ணாமலையின் பொய்யை, பா.ஜ.க. அமைச்சரே மறுத்துவிட்டார். உண்மைத் தன்மையை மறைத்துவிட்டு, மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பொய்யான தகவலை பரப்பினார்.அண்ணாமலை சொன்ன பொய்யை, அவரோடு ‘கள்ளக் கூட்டணியில் இருக்கும்’ பழனிசாமியும் பரப்பினார். அண்ணாமலையும் பழனிசாமியும் வதந்திகளால் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். சொந்தக் கட்சி பலத்தை வளர்க்கத் தெரியாமல், எதிராளியிடம் ஏதாவது பலவீனம் சிக்குமா என்று காத்துக் கிடக்கிறார்கள். அவர்கள் ஏமாந்து தான் போவார்கள்.

‘தி.மு.க. அரசு தமிழ்நாட்டு வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க.வுக்கு இருந்த பத்து வோட்டை மூனு வோட்டாக ‘பின்னோக்கி’ இழுத்ததுதான் அண்ணாமலையின் சாதனை என்று தமிழ்நாடு பா.ஜ.க.வினரே சொல்கிறார்கள். திருந்துங்கள் அண்ணாமலை. ‘இதெல்லாம் ஒரு பிழைப்பா?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

Also Read: “கற்பனைக் கதைகள் இல்லாத பொங்கல் விழாவில், ஒரு இனத்தின் பண்பாடு இருக்கிறது” - முரசொலி !