murasoli thalayangam

அதிமுக ஆட்சியில் கஜா புயல் வந்தபோது மாமனார் வீட்டு விருந்தில் இருந்தவர்தான் பழனிசாமி - முரசொலி காட்டம் !

முரசொலி தலையங்கம் (05-12-2024)

சாந்தனூரும் செம்பரம்பாக்கமும்

சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர் வரத்து அதிகரித்து வரும் போதே வெள்ள அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும், திடீரென திறந்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இவரெல்லாம் எந்த லட்சணத்தில் பொதுப்பணித் துறையை ஒரு காலத்தில் கவனித்திருப்பார் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. ஏதாவது வாய்க்கு வந்ததை உளற வேண்டும் என்பதற்காக அவர் உளறிக் கொண்டிருக்கிறார். சிந்தனைக் குறைபாடு கொண்ட சில கட்சிகளின் பிரமுகர்களும் இதனைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கான விளக்கத்தை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். சாத்தனூர் அணைக்குத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பைக் கருதி தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனை வைத்து பொய் சொல்வதற்கு பழனிசாமிக்கு ஒரு அளவு வேண்டாமா?

*நீர் வரத்து அதிகமான நிலையை முன்கூட்டியே கணித்து 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன.

•நீர் வெளியேற்றப்படும் போது கரைகளிலுள்ள கிராமங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை தரப்பட்டது.

•முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

*வெள்ளம் வெளியேறும் போது நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

•அணையில் இருந்து மிக அதிக அளவாக 1.30 லட்சம் கன அடி நீர் திறந்து விடாமல் போயிருந்தால் அணைக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.

•அணைக்குப் பாதிப்பு ஏற்பட்டால் 7 டி. எம்.சி. நீரும் வெளியேறி இருக்கும்.

•முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. - என்ற விளக்கங்களை மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இவை எல்லாம் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த பழனிசாமிக்குப் புரியுமா எனத் தெரியவில்லை.

2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கடும் மழையால் ஏரிகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னை வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. சென்னை மாநகரமே பல நாள்களுக்கு முடங்கிப்போனது. முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு பலரை மூழ்கடித்தனர். 'செம்பரம்பாக்கத்தை திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி வாங்கவே எங்களுக்கு இரண்டு நாள் ஆனது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று அதிகாரிகள் சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

அந்தப் பேரிடரை எதிர் கொண்டதில் அ.தி.மு.க. அரசின் லட்சணத்தை போஸ்ட் மார்ட்டம் செய்தது சி.ஏ.ஜி. என்ற இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை. ‘2015--ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கு மனிதத் தவறே காரணம். தனியார் நிலத்தைப் பாதுகாக்கவே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது' என கண்டறிந்தது சி.ஏ.ஜி. அ.தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால் 239 மனித உயிர்கள் பலியானது.

2018-ல் ஏற்பட்ட கஜா புயலையும் சரியாக எதிர்கொள்ளவில்லை பழனிசாமி. காவிரி டெல்டாவில் 12 மாவட்டங்கள் பாதிப்பு, 63 பேர் பலி, 3.42 லட்சம் வீடுகள் சேதம், பல்லாயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்தன, ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு என கஜா புயல் புரட்டிப்போட்ட வடுக்கள் அதிகம்.

"முதல்வர் பழனிசாமி ஏன் போகவில்லை” என விமர்சனங்கள் எழுந்த பிறகே அங்கு எடப்பாடி பழனிசாமி போனார். புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குப்பம், தஞ்சை சூரப்பள்ளம் இடங்களுக்குச் சென்று ஆளும் கட்சிக்காரர்கள், போலீஸார் புடைசூழ, கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபடியே சிலருக்கு மட்டும் நிவாரண உதவிகளை வழங்கிவிட்டுத் திரும்பினார். புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லாமல் பாதியில் திரும்பினார் பழனிசாமி. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் மண்ணில் கால்கள்கூட பதியாமல் ஹெலிகாப்டரில் எட்ட நின்று பார்த்ததோடு கடமை முடிந்தது என நிறுத்திக் கொண்டார்.

‘கஜா புயல் கரையைக் கடக்கும்' எனத் தேதி குறிக்கப்பட்ட தினத்தில், சேலத்தில் எடப்பாடிக்குப் பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்தார்கள். சேமூர் அம்மாபாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் மாமனார் வீட்டு விருந்திலும் கோவில் விழாவிலும் கலந்து கொண்டார். சேமூர் செல்லும் சாலை முழுக்க ஃபிளெக்ஸ் பேனர்கள். ‘வா மருமகனே', 'எங்கள் ஊரு மருமகனே' என வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் தனியார் நிகழ்ச்சிக்கு பங்கேற்கச் சென்ற பழனிசாமி, அப்படியே பிரதமரையும் சந்தித்து மனுக் கொடுத்து விட்டு வந்தார்.

2017 நவம்பரில் தாக்கிய ஓகிப் புயலால் நிலைகுலைந்து போனது கன்னியாகுமரி. மீன்பிடி படகுகளும் மீனவர்களும் நிர்மூலமானார்கள். அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க உழைத்துக் கொண்டிருந்தார் பழனிசாமி. “மீனவர்களை மீட்டுத்தரக் கோரி போராட்டம் நடைபெறும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த, 14 நாட்கள் கழித்து கன்னியாகுமரிக்கு அவசரமாக ஓடினார் எடப்பாடி. மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காததால் அன்றைய ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்டனர். அப்படி எதுவும் தனக்கு நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு இடத்தில் திரட்டி அமர்த்தப்பட்ட மீனவர்களிடம் எடப்பாடி பழனிசாமி சம்பிரதாயமாக ஆறுதல் சொன்னார்.

எடப்பாடி கன்னியாகுமரிக்குப் போனபோது எதிர்ப்பு தெரிவித்து கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. “சாவுக்கு வரவில்லை... காரியத்திற்கு வருகிறாரா முதலமைச்சர் பழனிசாமி” என்று பேனர்கள் வைத்தார்கள் மீனவர்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல் அ.தி.மு.க. நிர்வாகிகளால் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டவர்களிடம் ஒரு நாடகத்தை நடத்திவிட்டு வந்தார் எடப்பாடி. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 35 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துத் தான் வாய்ச்சவடால் பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

Also Read: விழுப்புரம் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 146 இடங்களில் மருத்துவ முகாம் - தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை!