murasoli thalayangam
நரேந்திர மோடி vs அசோகா மோடி : “இந்திய பொருளாதாரம் குறித்து எந்த மோடி சொல்வது உண்மை?” - முரசொலி கேள்வி!
முரசொலி தலையங்கம்
03.12.2024
எந்த மோடி சொல்வது உண்மை?
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, இந்திய நாட்டின் நிதி நிலைமையை தரை மட்டத்துக்கு இறக்கிய வரலாற்று வேதனையைச் செய்துள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 5.4 விழுக்காடு என்கிற அளவில் சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனைச் சொல்வதும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தான்.
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.) ஒரு செய்திக் குறிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியிட்டுள்ளது."கடந்த 2023-24 ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 விழுக்காடாக இருந்தது. இந்த நிகழ் காலாண்டில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.4 விழுக்காடாகச் சரிந்துள்ளது. இதற்கு நுகர்வு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவே காரணம்"என்று அந்த அறிக்கை சொல்கிறது.
2022-23 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.3 விழுக்காடு குறைந்து இருந்தது. அதன்பிறகு இப்போது 5.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் வி.அனந்த நாகேஸ்வரன்,"பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது" என்று சொல்லி இருக்கிறார். இந்த ஏமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கும் நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இல்லை.
"நாட்டின் பொருளாதார செயல்திறன் அழிவை எதிர்கொண்டு வருகிறது.ஆனால் பிரதமர் மோடி மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை உருவாக்கி வருகிறார். தன்னை மனிதப் பிறவியல்ல என்று கூறிக் கொள்ளும் பிரதமரும், அவரது புகழ்பாடும் சகாக்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கான காரணத்தை உள்நோக்கத்துடன் புறக்கணிக்கின்றனர்"என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார். 'தொழிலாளர்களுக்கான ஊதிய வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையே பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு காரணம்' என்று நிதி தரவுகள் சேவை நிறுவனம் சொல்லிய அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார்.
இந்தக் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில், 5.4 விழுக்காடுதான்கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கணிப்பு பொய்யாகி உள்ளது. உற்பத்தி,சுரங்கத்துறையில் நிலவிய மந்தநிலையே பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 14.30 விழுக்காடாக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சியானது தற்போது 2.20 விழுக்காடாகவும், 11.10 விழுக்காடாக இருந்த சுரங்கத் துறை வளர்ச்சியானது 0.01 விழுக்காடாகவும் குறைந்ததே பொருளாதார வளர்ச்சி குறைய முக்கியக் காரணமாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
அமெரிக்க பிரிஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் அசோகா மோடி, ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்."கடன் வளர்ச்சியைச் சார்ந்து இயங்கும் இந்தியா மலை முகட்டை நோக்கி பிரேக்குகள் பழுதான கார் பயணிப்பதைப் போன்றது"என்று சொல்லி இருக்கிறார்.
"வேலை வாய்ப்புகள் நிறைந்த வளர்ச்சியை உருவாக்காமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்திக் காட்ட நிதிச் சேவைத் துறையில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு நிதித்துறை வளர்ச்சியின் மூலம் பெறப்பட்டுள்ளது. விரைவான கடன் அதிகரிப்பும் மிகை மதிப்பீடு செய்யப்பட்ட மாற்று விகிதமும் ஒரு ஆபத்தான கலவை என்பதை வரலாறு தெளிவாக்குகிறது. 'நிதிச் சந்தை மட்டுமே வளர்ச்சியைத் தூண்டும், மனித வள அபிவிருத்தியின் குறைபாட்டைக்களையும்' என்பது மத்திய ஆட்சியாளர்களின் கண்மூடித்தனமான கனவு. நிதி நெருக்கடி வேலைவாய்ப்புகளை விழுங்கி விடும்."என்று சொல்லி இருக்கிறார். அதைத்தான் இப்போது புள்ளிவிபரங்களின் மூலமாகப் பார்க்கிறோம்.
தொழிலாளர்களின் நலத் திட்டங்களைக் குறைத்து விட்டு வர்த்தக நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளையும், மானியங்களையும் அதிகரித்தால் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விடும் என்று பா.ஜ.க.அரசு நினைத்தது. அது பொருளாதாரத்தை வளர்க்காது என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது எதையும் தெரியாமல், 'அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும்' என்று சொல்லி இருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். "கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் காரணமாகவும் கோவிட் அதிர்ச்சி மங்குவதன் காரணமாகவும் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் சிறப்பாக வெளிப்படும். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி மேம்பாடுகள் தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று ஒரு மாதத்துக்கு முன் பேசினார் நிர்மலா சீதாராமன். அக்டோபரில் பேசினார். நவம்பரில் வந்துள்ள புள்ளிவிபரம் அப்படி இல்லை என்று சொல்கிறது.
'இந்தியா வளர்கிறது' என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 'பிரேக் பிடிக்காத காரில் செங்குத்தாகச் செல்கிறீர்கள்' என்கிறார் அசோகா மோடி.
எந்த மோடி சொல்வது உண்மை?
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!