ஊடகங்களைச் சந்திக்காத பிரதமர் மோடி, திடீரென்று ஊடகங்கள் முன்னால் தோன்றி தனது திருவாயைத் திறந்திருக்கிறார். அவர் யதார்த்த உலகத்தில் இருக்கிறாரா, அல்லது கற்பனாலோகத்தில் இருக்கிறாரா எனத் தெரியவில்லை.
“அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் பலமுறை நிராகரித்துள்ளனர். மக்கள், எதிர்க்கட்சிகளை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும். மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்களும், சக ஊழியர்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியவர்களும், அவர்களின் உணர்வுகளை மதிக்காதவர்களும் நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் என்றுமே பேசியதில்லை” - என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இவர் நாடாளுமன்றத்துக்கு எத்தனை முறை வந்துள்ளார்?
நாடாளுமன்றத்தில் எத்தனை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்? எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறாரா? தான் பதில் சொல்ல வேண்டிய நாளில் மட்டும் வருகை தந்து, தனது உரையை ஆற்றிவிட்டுச் செல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டவர் மோடி.
இவர் நாடாளுமன்ற விவாதங்கள் பற்றி பேசலாமா? தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் திறந்த விவாதத்தை நடத்துவதற்கு எப்போதாவது அனுமதித்திருக்கிறாரா பிரதமர் மோடி? அப்படி ஒரு விவாதம் நடந்த போது உட்கார்ந்து எதிர்க்கட்சிகளின் உரைகளைக் கேட்டுள்ளாரா? அதற்கு பதில் அளித்துள்ளாரா?
இல்லை! கேள்வி நேரத்தின் போது ஒரு நாள் கூட பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்ததில்லை. பொதுவாக நாடாளுமன்றங்கள் நடக்கும் போது பிரதமரோ, அமைச்சர்களோ வெளிநாடு செல்ல மாட்டார்கள். அப்போதும் வெளிநாடு சென்றவர் தான் பிரதமர் மோடி.
2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார் மோடி. 2018 ஆகிய நான்கு ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு மோடி வந்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரை முறையாக நாடாளுமன்றத்துக்கு வரச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது, இதுவரை இருந்த எந்தப் பிரதமரும் எதிர்கொள்ளாத கேள்வி ஆகும். மணிப்பூர் விவகாரத்தில் இவரை பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்தன. அதற்கு அவர் பேசித்தான் ஆக வேண்டும். அதனால் வேறு வழியின்றி பேசினார். இது தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி காப்பாற்றும் லட்சணம் ஆகும்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அவர் தானே தவிர, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அல்ல. ‘400 இடங்களைக் கைப்பற்றுவோம்' என்று நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சொன்னார் பிரதமர் மோடி. ‘370 இடங்களை பா.ஜ.க. மட்டும் தனித்து கைப்பற்றும்’ என்றும் சொன்னார் பிரதமர் மோடி. அப்படி வென்று காட்டி இருக்கிறாரா? பா.ஜ.க. 370 இடங்களைப் பெறவில்லை. 240 இடங்களைத் தான் பெற்றுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க 272 இடங்கள் இருக்க வேண்டும். அதற்கே 32 இடங்கள் தேவை. பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 272 ஐ விட 100 இடங்கள் அதிகமாகப் பெறுவோம் என்று சொல்லிக் கொண்டார். அது நடக்கவில்லை. மக்கள் அவரை நிராகரித்துவிட்டதாகத் தானே பொருள்?
'பா.ஜ.க. கூட்டணியானது 400 இடங்களைப் பிடிக்கும்' என்று சொன்னார் மோடி. இன்று பா.ஜ.க. கூட்டணியானது 292 இடங்களைத்தான் பிடிக்க முடிந்துள்ளது. 300 ஐ கூடத் தொட முடியவில்லை. மக்கள் அவரை நிராகரித்துவிட்டார்கள் என்று தானே பொருள்? ஒரிசா ஆந்திரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் இருந்திருந்தால் அங்கும் நிலைமைகள் மாறி இருக்கும்.
மாநில ஆட்சியை மாற்ற நினைத்தவர் கோபம், நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்து விட்டது. பீகார் -கர்நாடகாவில் பத்து இடங்கள் குறைந்திருந்தால் நிலைமை மாறி இருக்கும். 210 க்கு பா.ஜ.க. இறங்கி இருக்கும்.370 இடங்களைக் கைப்பற்றி இந்திய ஜனநாயகக் கட்டமைப்பை நாசப்படுத்த நினைத்திருந்தார் மோடி.
'400 கிடைத்தால் தான் நாம் நினைத்ததைச் செய்ய முடியும்' என்று முழங்கினார் மோடி. ஒரே நாடு - ஒரே தேர்தல் என்று சொல்லி சர்வாதிகாரத் தன்மை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நினைத்தார். 'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்று வோம்' என்று பா.ஜ.க. எம்.பி. இந்த தேர்தலில் பரப்புரை செய்தார்.
“400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார். அது எதையும் செய்ய முடியாத வகையில் மோடியை நிராகரித்துள்ளார்களே மக்கள்!தேர்தலுக்கு முன்னதாக கடவுளின் அவதாரமாக தன்னைக் காட்டிக் கொண்டவர்,
தேர்தல் முடிந்ததும் ‘கூட்டணிக் குழந்தையாக’ மாறினாரே ஏன்? “மக்களவைத் தேர்தலில் அடைந்த வெற்றிக்காக தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றாரே ஏன்? மக்கள் நிராகரித்தது தானே?! மோடி சொந்த பலத்தால் பிரதமராக இருக்கவில்லை.
நிதிஷ்குமார், சந்திரபாபு ஆகிய இருவரது தயவால்தான் பிரதமராக இருக்கிறார். அதனை உணர்ந்து சவால் விட வேண்டும்.