murasoli thalayangam

விபத்து நேரத்தில் அரசு எப்படி செயல்பட வேண்டும்?.. நாட்டுக்கே முன்னுதாரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர்!

முரசொலி தலையங்கம் (06-06-2023)

ஒடிசா விபத்தும் தமிழ்நாடு அரசும் – 1

ஒடிசாவில் மாபெரும் ரயில் விபத்து நடந்ததும் தமிழ்நாடு அரசு எப்படிச் செயல்பட்டது, அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படிச் செயல்பட வைத்தார்கள் என்பதில்தான் இந்த ஆட்சியின் சிறப்பும், முதலமைச்சர் அவர்களின் பெருமையும் அடங்கி இருக்கின்றன.

கடந்த 2 ஆம் தேதி இரவு ஒடிசாவில் ரயில் விபத்து நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்பதுதான் முதல் கட்டத் தகவல். உடனடியாக ஒடிசா முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை அனுப்பி வைப்பேன் என்று சொல்கிறார்கள். இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக்குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தெரிவித்தார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளை மறுநாள் காலையில் ஒடிசா செல்லக் கட்டளையிடுகிறார் முதலமைச்சர் அவர்கள்.

விடிந்தால் 3 ஆம் தேதி. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கம். நூற்றாண்டு வாய்ப்பு இது. ஆனாலும் ஒடிசாவில் இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கிறதே என்று துடித்த முதலமைச்சர் அவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளிவைக்கும் முடிவை எடுக்கிறார்கள். "ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடை பெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும்" என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அன்றைய தினம் தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு சென்னையில் நடைபெற இருந்தது. தோழமைக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் பங்கெடுக்கும் மாபெரும் மாநாடு போன்ற பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனையும் தள்ளி வைக்கச் சொல்லி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

தலைவர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தியதும், அடுத்த நொடியே ஒடிசா விபத்தில் உயிரிழந்தோர்க்கு ஒரு நிமிட அமைதி அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் அவர்கள். சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றார் முதலமைச்சர் அவர்கள். ஒடிசா ரயில் விபத்தில் உயிரி ழந்த, காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து பயணிகள் விசாரணை மற்றும் உதவி மையத்துக்கு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்றார்கள். விபத்து குறித்து தொலைபேசியில் வரும் அழைப்புகள் என்ன மாதிரியான தகவல்களைத் தாங்கி வருகின்றன என்பதைக் கேட்டார்கள். இரயில்வே கட்டுப்பாட்டு அறையில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளை அமர்த்தி கண்காணிக்கச் சொன்னார் முதலமைச்சர் அவர்கள்.

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசரகால செயல்பாட்டு மையம் இருக்கிறது. அங்கே வருகை தந்தார் முதலமைச்சர். இந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர். ஒடிசா மாநில தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள். மாநிலக் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை அறிவித்தார்கள். வாட்ஸ்அப் எண்ணும் அறிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்திருந்தால் அவர்களது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக அறிவித்தார்கள்.

இதற்கிடையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் குழு. ஒடிசா சென்றது. விபத்து நடந்த பால சோர் என்ற இடத்துக்கு ஹெலிகாப்டர் மூலமாக இவர்கள் சென்றார்கள். அந்த இடத்தைப் பார்வையிட்ட பின், மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஒவ்வொரு தளமாகச் சென்றார்கள். ஒரு மணி நேரம் மருத்துவமனை யிலேயே இருந்தார்கள். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள் அமைச்சர்கள். மருத்துவர்கள் மற்றும் அதிகாரி கள் குழுவிடம் இதுபற்றிக் கேட்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை, அமைச்சர்கள் உதய நிதி. சிவசங்கர் ஆகியோர் சந்தித்தார்கள். விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந் தவர்கள் சிக்கி இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என்று ஒடிசா முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள்.

4 ஆம் தேதியும் தமிழ்நாடு அரசின் குழு ஒடிசாவில் தங்கி இருந்தது. ஒடிசா மாநிலத்தின் சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்ற மீட்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின். எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பிரதீப் குமார் ஜெனா நடத்திய கூட்டம் இது.

'தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இறக்கவில்லை. பாதிக்கப்பட வில்லை' என்பதை அமைச்சர் உதயநிதி அவர்கள் உறுதி செய்து, முதல மைச்சர் அவர்களுக்கு தெரிவித்தார்கள். 3 ஆம் தேதி மாலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அரசின் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் அவர்கள்.

- தொடரும்

Also Read: பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே துறை எப்படி உள்ளது?.. ரத்த சாட்சி ஒடிசா ரயில் விபத்து: முரசொலி வேதனை!