முரசொலி தலையங்கம்

பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே துறை எப்படி உள்ளது?.. ரத்த சாட்சி ஒடிசா ரயில் விபத்து: முரசொலி வேதனை!

ரயில்வே துறை எப்படி இருக்கிறது பா.ஜ.க. ஆட்சியில் என்பதற்கு ரத்த சாட்சியம் 280க்கும் மேற்பட்ட உயிர்கள்.

பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே துறை எப்படி உள்ளது?.. ரத்த சாட்சி ஒடிசா ரயில் விபத்து: முரசொலி வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (05-05-2023)

துயரம் துயரம் துயரம்!

இந்தியாவில் இதுவரை நடந்திராத கோரமான ரயில் விபத்தாக ஒடிசா ரயில் விபத்து அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த துயரமான கோரமான சம்பவத்துக்கு பொறுப்பேற்கப் போவது யார் என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது அனைவர் மனதிலும் உள்ள கேள்வி ஆகும்.

1956 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பேர் இறந்து போனார்கள். இதற்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். 1999 ஆம் ஆண்டில் காய்சால் ரயில் விபத்தில் 290 பேர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அன்றைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலகினார். 2000 ஆம் ஆண்டில் நடந்த இரண்டு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அன்றைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அதனை பிரதமர் வாஜ்பாய் ஏற்க மறுத்தார். 2017 ஆம் ஆண்டு கலிங்கா - உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகினார். அது போல் முதல் கட்டமாக இன்றைய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் யார் துறையிலோ நடந்ததைப் போல இருக்கிறார் இன்றைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதற்குக் காரணம், தவறான சிக்னல் தரப்பட்டதே என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக அதை ரத்து செய்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே துறை எப்படி உள்ளது?.. ரத்த சாட்சி ஒடிசா ரயில் விபத்து: முரசொலி வேதனை!

‘’இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது. ரயில்வே துறையில் ஒருங்கிணைப்பு இல்லை, விபத்து தடுப்புக் கருவிகள் முறையாகப் பொருத்தப்படாததால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது” என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அருகில் வைத்துக் கொண்டே சொல்லி இருக்கிறார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள்.

‘’இந்திய ரயில்வே துறையையே அழித்துவிட்டார்கள். மிகப்பெரிய அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்’’ என்று முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

விபத்து நடந்த பாலசோர் வழித்தடத்தில், ஓட்டுநரின் கவனக் குறைவால் விபத்து ஏற்படாமல் தடுக்கும் ‘கவாச்’ ( kavach)என்ற பாதுகாப்பு அம்சம் அமைக்கப்படவில்லை என்று ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்திருக்கிறார். விபத்து ஏற்படும் சூழல் வந்தால் ரயிலை தானாகவே நிறுத்திவிடுவது தான் ‘கவாச்’ அம்சம் ஆகும். ‘Kavach’ என்பது தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) ஆகும். இது அமைக்கப்படவில்லை.சிக்னல் தவறாகக் காட்டி இருந்தால் இந்தக் கருவி அரைகிலோ மீட்டருக்கு முன்பே ஆட்டோ மேட்டிக்கான ரயிலை நிறுத்திவிடும். இந்தியாவில் பெரும்பாலான ரயில் பாதைகளில் இந்த வசதி இது வரை இல்லை. ஒன்பது ஆண்டு கால மோடி சர்க்காரின் சாதனை இது. 2022 ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் அமைக்கவில்லை.

6 ட்ராக்குகள் இருக்கும் வழித்தடத்தில் 3 ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து நடந்துள்ளது. ‘கவாச்’ பொருத்தப்பட்டு இருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அரவிந்தன் என்ற பதிவர் முகநூலில் இது குறித்து எழுதி உள்ளார். ‘’இந்திய ரயில் வேத்துறையின் அங்கமான Research and standards organisation (RDSO) மூன்று தனியார்களுடன் இணைந்து ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக National Automatic Train Protection என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அதற்கு KAVACH என்றும் பெயரிட்டார்கள். 23-.03.-2022 ம் தேதியன்று நாடாளுமன்றத்தில், ரயில்வேதுறை மற்றும் Kavach தொழில்நுட்பம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்திருந்தார்.

பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே துறை எப்படி உள்ளது?.. ரத்த சாட்சி ஒடிசா ரயில் விபத்து: முரசொலி வேதனை!

Kavach தொழில்நுட்பம் தொடர்பான இறுதி திருத்தங்கள் செய்யப்பட்ட தேதி- 18-.01.-2022. அதன்படி, தொழில்நுட்ப ரீதியான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட தேதி 14.-03-.2022. அதனை நடை முறைப்படுத்தவில்லை.

1957-–ம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் அமைப்புதான் Research and standards organisation (RDSO) நிறுவனம்.

Train collision avoidance system (TCAS) குறித்து 2012–ல் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. ஆனால்,தனியார் பங்களிப்புடன் இணைந்து National Automatic Train Protection (ATP) என்ற தானியங்கி தொழில்நுட்பமாக மேம்படுத்தினார்கள்.ஒடிசாவில் நடந்துள்ள விபத்து “கவாச்” தொழில்நுட்பம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது” என்று எழுதி இருக்கிறார்.

இந்திய ரயில்வேயின் மொத்த பாதைகளின் நீளம் 68 ஆயிரத்து 43 கிலோ மீட்டர் என்றும், இதில் ஆயிரத்து 445 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இந்த கவாச் வசதி உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது 2 சதவிகித பாதையில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 2.40 லட்சம் கோடியை ஒதுக்கினார்கள். பிரதமர் கதிசக்தி திட்டத்தில் ரயில்வே முக்கியத் துறை என்று முழங்கினார்கள். ஆனால் அப்பாவி மக்களை நிர்மூலம் ஆக்கிவிட்டார்கள். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டோம் என்றார்கள். என்ன உறுதி செய்திருக்கிறார்கள் என்பதை ஒடிசா ஒரு சம்பவம் சொல்லி விட்டது. ரயில்வே துறை எப்படி இருக்கிறது பா.ஜ.க. ஆட்சியில் என்பதற்கு ரத்த சாட்சியம் 280க்கும் மேற்பட்ட உயிர்கள். துயரம்... துயரம்... துயரம்...

banner

Related Stories

Related Stories