murasoli thalayangam

"சனாதன - வர்ணாசிரம - மதவாத - வகுப்புவாத சக்தியின் முகத்திரையை கிழித்த முதலமைச்சரின் பேச்சு".. முரசொலி!

முரசொலி தலையங்கம் (05-10-2022)

ஆன்மிகமும் அரசியலும்!

ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் துல்லியமான வேறுபாட்டை விளக்கி - அதற்கான இலக்கணத்தை வகுத்துக் காட்டி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்

விளிம்புநெறி இதிகாசம் வித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉணரத் தினையே சித்தமே – என்று பாடியவர் இராமலிங்க வள்ளலார் அவர்கள். (1823-1874)

சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெரும் சோதியான வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ஆம் நாளை ‘தனிப்பெருங் கருணை நாள்’ என அறிவித்தார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதன் தொடர்ச்சியாக, வள்ளலாரின் நினைவைப் போற்றும் வகையில் முப்பெரும் விழாவை நடத்தி இருக்கிறது தி.மு.க. ஆட்சி. அப்போது முதலமைச்சர் ஆற்றிய உரை பலரது அவதூறு பரப்புரைகளுக்கு பதில் சொல்வதாக அமைந்திருந்தது.

‘‘வள்ளலார் விழாவை நாங்கள் நடத்துவது சிலருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். சிலருக்கு இது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் சிலர் சொல்லி வரும் அவதூறுகளுக்கான பதில்தான் இந்த விழா.

திராவிட மாடல் ஆட்சியானது ஆன்மிகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் நாட்டில் பேசி வருகிறார்கள். ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல, தி.மு.க. ஆட்சி.

ஆன்மிகத்தை அரசியலுக்கும் –

தங்களது சொந்த சுயநலத்துக்கும்- –

உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் – மட்டுமே- பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானதுதான் இந்த ஆட்சி.” என்று கல்வெட்டுக் கருத்தைப் போலச் சொல்லி இருக்கிறார்கள் முதலமைச்சர் அவர்கள்.

பல்வேறு இறை நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் நாடு இது. அவரவர் இறை நம்பிக்கை, அவரவர்க்கு உயர்வானது. உண்மையானது. ‘என் மதம் உயர்ந்தது - உன் மதம் தாழ்ந்தது’ என்று மதத்தை நிறுவனம் ஆக்குவதன் மூலமாக தங்களது பிழைப்பை ஓட்டுவதற்கு மதவாத சக்திகள் நினைக்கின்றன. மதம் என்ற நிறுவனத்தை, தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்துவதற்கும் அத்தகைய சக்திகள் முயல்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சார்பானவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு –- அவர்களை உயர்த்துவதாகச் சொல்லி - தங்களை வளப்படுத்திக் கொள்ள அத்தகைய சக்திகள் முனைகின்றன. பா.ஜ.க.வின் அரசியல் இந்த மையப்புள்ளியில் மட்டும்தான் மையம் கொண்டுள்ளது.

அவர்களுக்கு ‘அனைவருக்குமான கட்சி’யாக திராவிட முன்னேற்றக்

கழகம் இருப்பதே எரிச்சலாக இருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தி வருவதே மகா எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான், ‘இவர்கள் நாஸ்திகர்கள்’ என்று சொல்லி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள். இப்படிச் சொல்லும் அரசியல் ஆஸ்திகர்களுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பதில் சொல்லி விட்டார்கள்.

ஆத்திகமும் - நாத்திகமும் இன்று என்ன செயல் செய்கிறது என்பதை தவத்திரு அடிகளார் அவர்கள் சொன்னார்கள்: ‘இன்றைய ஆத்திகம் என்பது சிலரின் சுயநலமாக இருக்கிறது - இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மை மக்களின் பொதுநலமாக இருக்கிறது’ என்று சொன்னார்.

அதாவது, மதம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனால் அது இன்று என்னவாக இருக்கிறது என்பதையே கவனிக்க வேண்டும். ஒரு காலத்தில் தொழிலாக இருந்தது ‘ஜாதி’. ஆனால் இன்று அப்படி இல்லை. ஒரு காலத்தில் மதம் என்பது, ‘இறைநம்பிக்கையாக’ மட்டுமே இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. இதனை முதலில் புரிந்து கொண்டால்தான் மதவாத, சாதியவாத சக்திகளின் நச்சு நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். இத்தகையவர்கள் அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும் எதிரானவர்களாக இருப்பார்கள். அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இவர்கள் விமர்சிப்பார்கள். என்ன சொல்லி விமர்சிப்பார்கள் என்றால், இவர்கள் நாஸ்திகர்கள், மதத்தில் தலையிடுகிறார்கள் என்று சொல்வார்கள்.

ஒன்றே குலம் – ஒருவனே தேவன் என்பது பேரறிஞர் அண்ணா அடிக்கடி பயன்படுத்திய மொழியாகும். ‘ஒருவனே தேவன்’ என்பது ‘அனைத்து மதத்தவரையும் சமப்படுத்தும்’ சமத்துவச் சிந்தனையாகும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பது, கண்ணுக்கு நேராகத் தெரிபவர்களைக் கவனி என்பதே மெய்யியல் என்பது ஆகும். ‘கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது’ என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேனா என்பதல்ல பிரச்சினை, கடவுள் என்னை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதே முக்கியம்’ என்றார். நன்னடத்தையே மெய்யியல் – என்பது கலைஞரின் நோக்கு ஆகும். இத்தகைய மெய்யியல் - இறையியல் என்பது அவரவர் விருப்பம். அவரவர் தேர்வு. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் அன்றும் தெளிவாக இருந்தது. இன்றும் இருக்கிறது.

ஜாதி உயர்வு தாழ்வு உண்டு என்று சொல்லும் சனாதன சக்திகளுக்கு -என் மதம் மட்டுமே உயர்ந்தது, மற்ற மதம் தாழ்ந்தது என்று சொல்லும் பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகளுக்கு – திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்த முனையும் பொதுமைச் சிந்தனையைப் பார்த்தால் பொறுக்க முடியவில்லை.

சாந்தி பருவம் முதல் இன்றைய சனாதனிகள் வரை சொல்லி வரும் வருணாசிரமச் சிந்தனைகளுக்கு எதிராக அனைவரும் படிக்கலாம், அனைவரும் அதிகாரப் பதவிக்கு வரலாம், ஆணும் பெண்ணும் சமம், கோவில்களில் சமத்துவம் வேண்டும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும், தேவ பாஷை என்று எதுவும் கிடையாது, வேலையில் ஜாதிப்பிரிவினை கூடாது- என்ற அடிப்படையில் திட்டங்களைத் தீட்டும் ‘திராவிட மாடல்’ அரசை இவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? அதனால் தான் ஏதாவது ஒரு அவதூறு வதந்திகளைக் கிளப்பிவிட்டு மடைமாற்றம் செய்து வருகிறார்கள். அதற்கு விளக்கம்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருப்பது ஆகும்.

முதலமைச்சரின் சொற்களில் சனாதன - வர்ணாசிரம - மதவாத - வகுப்புவாத - சாதியவாத சக்தியின் உண்மையான முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.

ஆன்மிகத்தில் இருந்து வேற்றுமையை, உயர்வு தாழ்வை அகற்றியவர் வள்ளலார். அதனாலேயே அவர் பின்பற்றத்தக்கவராக இருக்கிறார்!

Also Read: “பா.ஜ.க வளர்த்த இந்தியா இதுதான்.. ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நிதின் கட்கரி 'தேசவிரோதி'யா?” : முரசொலி !