murasoli thalayangam

20 புதிய கல்லூரிகள்.. நித்தமும் முத்திரை பதித்து கொண்டே இருக்கும் திராவிட மாடல் அரசு: முரசொலி தலையங்கம்!

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 09, 2022) தலையங்கம் வருமாறு:

இருபது புதிய அரசுக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழகக் கல்வித் துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நாளாக ஜூலை 7 அமைந்துவிட்டது!

“பெருந்தலைவர் காமராசர் காலம் என்பது பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களது ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது.

இந்த ஆட்சிக் காலம்; உயர்கல்வி, தொழிற் கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அடிக்கடி வலியுறுத்திச் சொல்லி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்த இலக்கைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன்தான் இருபது கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிகவும் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80.33 விழுக்காடு ஆகும். இது தேசிய விழுக்காட்டை விட மிக அதிகமாகும். தமிழ்நாட்டை - ஆரம்பக் கல்வியிலும் உயர் தொடக்கக் கல்வியிலும் இந்திய மாநிலங்களில் முதலாவது மாநிலமாக “அஸ் சோசம்” என்ற தொழில் நிறுவனம் அறிவித்தது.

பள்ளிப் படிபை முடித்து உயர் கல்வி செல்பவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 27.1 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் உயர் கல்விக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 51.4 சதவிகிதம் ஆகும். இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்திய சராசரியை விட தமிழகத்தின் சராசரி இரண்டு மடங்கு ஆகும்.

தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 33 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இப்படி எத்தனையோ சாதனைகள் படைத்து வருகிறது தமிழகக் கல்வித் துறை.

கல்வியின் மீது தொடர்ச்சியான ஆர்வத்தை ஊட்டுவதாக தமிழக அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. மதிய உணவுத்திட்டம், அங்கன்வாடித் திட்டம், பாடப்புத்தகங்கள் வழங்கல், கட்டணமில்லாப் பேருந்து. இப்படி ஏராளமான திட்டங்களின் மூலமாக பள்ளிக்கூடங்களை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்த கொரோனா காலத்தில் அதில் ஒரு விதமான தொய்வு ஏற்பட்டாலும் - ‘இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தின் மூலமாக அந்தப் பள்ளத்தை சரி செய்து விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

‘இடை நிற்றல்’ என்பது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டது. இடையில் நின்ற பிள்ளைகளை மீண்டும் பள்ளிகளை நோக்கி வர வைத்து விட்டார்கள். மாநகராட்சிப் பள்ளிகளில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகமிக அதிகமாகி விட்டது.

பள்ளிகளில் லட்சக்கணக்கான பிள்ளைகள் சேரும் நிலையில், அவர்கள் உயர்கல்வியை அடையும் போது அதற்கான கல்லூரிகள் இருக்க வேண்டும். அருகாமையில் கல்லூரிகள் - மாவட்டங்களுக்குள் கல்லூரிகள் இருக்க வேண்டும். அதுவும் அரசுக் கல்லூரிகளாக அமைந்திருந்தால் பணம் ஒரு தடையாக அமையாது. அந்த வகையில் சிந்தித்துத்தான் 20 அரசுக் கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இருபது கல்லூரிகள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுவது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய மாநிலங்களிலேயே இதுதான் முதல் முறையாகும்.

“அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான உயர் கல்வியை வழங்கவும், மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று சட்டமன்றத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி அறிவித்து இருந்தார். அதன்படி இருபது கல்லூரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படியானால் அதற்கேற்ற தொழில் நிறுவனங்கள் பெருக வேண்டும். அப்படி தொழில் நிறுவனங்கள் பெருகினால், அதற்கேற்ற ஊழியர்கள் நமது மாநிலத்தில் இருக்க வேண்டும். அத்தகைய இளைஞர்களுக்கு இத்தகைய கல்லூரிகள் பயன்படும்.

“2026 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும்” என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமையில் ஓவ்வொரு இளைஞரையும் முதல்வனாக நினைக்கிறார் முதலமைச்சர். அத்தகைய இளைஞர்களுக்கு இத்தகைய கல்லூரிகள் பயன்படும்.

முதலமைச்சர் தனது உரைகளில் கல்வியைப் பற்றியே அதிகம் வலியுறுத்திச் சொல்லி வருகிறார்கள். “ஒரு மனிதனின் மாபெரும் சொத்து என்பது அவனது கல்விதான். அதுதான் யாராலும் திருட முடியாத சொத்து ஆகும்.

இன்றைக்கு அறிவு என்பதுதான் ஒரு மனிதனின் சக்தியாக அளவிடப்படுகிறது. knowledge is one' s power - என்பார்கள். ஏதோ ஒன்றில் உங்களது அறிவு கூர்மை பெறுமானால் அந்த அறிவு உங்களது வாழ்க்கையை வளமானதாக ஆக்கும்.

சாதி - மதம் - பணம் - அதிகாரம் - வயது -அனுபவம் - குடும்பம் - பதவி - நாடுகள் - வளர்ச்சி - ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடு கிறது.ஆனால் அறிவு மட்டும் தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது” என்று ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட் டார்கள். அத்தகைய அறிவுலகமாக தமிழ்நாட்டை உருவாக்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். அதற்கு இந்த இருபது கல்லூரிகள் பெரிதும் பயன்படும்.

நித்தமும் முத்திரை பதித்துக் கொண்டே இருக்கிறது ‘திராவிட மாடல்' அரசு!

Also Read: “கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு - வெறும் வாய்ச்சவடாலில் வண்டி ஓட்ட நினைக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி சாடல்!