murasoli thalayangam
கல்வியில் 15 ஆண்டு முன்னோக்கி உள்ளது தமிழ்நாடு.. எங்களுக்கு வேண்டாம் தேசியக் கொள்கை: முரசொலி தலையங்கம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன் 24, 2022) தலையங்கம் வருமாறு:
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வித் தடையை ஏற்படுத்தும் ஒரு கொள்கையை ஒன்றிய அரசு வகுத்துள்ளது. அதனை அனைத்து மாநிலங்களையும் நோக்கி திணித்துக் கொண்டு இருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் அந்தக் கொள்கைக்காகவே தன்னை நியமித்திருப்பதைப் போலத் தினமும் அதைப் பற்றியே பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
ஒன்றிய அரசால் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளை நாட்டுக்குச் சொல்வதற்கான நல்ல வாய்ப்பை ஒரு வழக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு முன் விசாரணையில் இருக்கிறது. இந்த அமர்வின் முன் தமிழக தலைமைச் செயலாளர், உயர்கல்விச் செயலாளர், பள்ளிக்கல்விச் செயலாளர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த பதில் மனு அனைவருக்குமான பதிலாக அமைந்துள்ளது.
தேசிய அளவில் சராசரி மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 சதவீதத்தில் இருந்து 2035 ஆம் ஆண்டில் 50 சதவீதமாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், தற்போதே தமிழகத்தில் 51.4 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கிறது.
மொத்தமுள்ள 38 மாநிலங்களில் 18 மாநிலங்கள் 27.1 என்ற சதவீதத்தைவிடகுறைவாகத்தான் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளன.
சராசரி மதிப்பை விட கூடுதலாகப் பெற்றுள்ள தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக மக்களுக்குத் தவறு இழைப்பதாகவும், எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைந்து விடும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி 5 ஆண்டுகள், பின்னர் மூன்று ஆண்டுகள், அதன் பின்னர் மூன்று ஆண்டுகள், அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் (5+3+3+4) என கல்வி முறை அமல் படுத்தப்பட்டால் ஏற்கனவே உள்ள கல்விமுறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று வயதில் சேர வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டால் அதற்கு மேற்பட்ட வயதினர் பள்ளியில் சேர முடியாத நிலை ஏற்படும்.
மழலையர் பள்ளி வகுப்புகள் இல்லாமலேயே 5 அல்லது 6 வயதில் பள்ளியில் சேரும் வாய்ப்பு தமிழகத்தில் உள்ள மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட மாணவர்களைப் பாதிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
இலவச கல்வி, மதிய உணவு, இலவசப் புத்தகம், இலவசச் சீருடை, இலவச மிதிவண்டி, இலவசக் காலணி, இலவச லேப்டாப், கல்வி உதவித் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடைநிற்றல் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள சமச்சீர் கல்வி மூலம் சர்வதேச அளவில் பல வெற்றிகளை மாணவர்கள் காண முடிகிறது. அவர்களது அறிவு, திறமை உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை மூலம் தொழில்முறை
கல்வியை அமல்படுத்தினால் முக்கியப் பாடத் திட்டம் மற்றும் அடிப்படை அறிவு ஆகியவற்றிலுள்ள மாணவர்களின் கவனம் சிதறும். தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கும், உயர்நிலை கல்விக்கும் தனித்தனியாக துறைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறோம். அவற்றின் மூலம் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் கண்காணிக்கப்பட்டுஅரசின்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் தனிக்கவனம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
- என்று தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் விளக்கமாகச் சொல்லி இருக்கிறது. இது ஏதோ ஒன்றிய அரசின்புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் அல்ல. உங்களின் தேசியக் கல்விக் கொள்கை வருவதற்கு முன்னதாகவே முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதாக இந்த மனு அமைந்துள்ளது.
‘நாங்கள் மிக உயரத்தில் இருக்கிறோம், அதற்கான கல்விக் கொள்கையாக உங்கள் கல்விக் கொள்கை இல்லை' என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது இந்த மனு.
“கல்வி என்பது மாநிலக் கொள்கை சார்ந்தது ஆகும். தேசியக் கல்விக் கொள்கை என்பது எந்தவிதமான சட்டபூர்வமான அங்கீகாரமும் இல்லாத கொள்கை அறிக்கை ஆகும். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்லக்கூடிய கல்விக் கொள்கையானது இருக்கிறது. இங்கு இருமொழிக் கொள்கை அமலில் இருக்கிறது. இருமொழிகளில் ஒன்று தாய் மொழிக் கல்வி முறை ஆகும். அந்த வகையில் தாய்மொழிக்கு முழுமையான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது” என்றும் இந்த மனுவில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்று மரபுகள், தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களை கருத்தில் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை தமிழகத்தின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்த ஆலோசனைகளை விரைவில் வழங்க இருக்கிறது.
ஏற்கனவே 15 ஆண்டுகள் முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறது தமிழகக் கல்வி. இன்னும் அதிக பாய்ச்சலில் செல்லட்டும். அதற்குத் தடையான தேசியக் கொள்கை வேண்டாம்!
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!