murasoli thalayangam

“தோழர் சங்கரய்யா சொல்லும் பாடம்” : முரசொலி தலையங்கம்

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 17, 2021) தலையங்கம் வருமாறு:

நூறாவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் தோழர் சங்கரய்யா. இந்த நூறு ஆண்டுகளில் எண்பது ஆண்டுகள், அரசியல் வாழ்க்கை அவருடையது. நூறு ஆண்டுகளைத் தொடும் அவர், இந்த சமூகத்துக்குச் சொல்வது - மக்களைப் பற்றிச் சிந்தித்து மக்களுக்காக போராடினால் மிக நீண்டகால வாழ்க்கை கிடைக்கும் என்பதைத்தான் அவரது வாழ்க்கை சொல்கிறது!

மூத்திரச் சட்டியோடு - முதுமையின் முனகலோடும் தானாய் வழியும் சிறுநீரின் வேதனையோடும் மூச்சுப்பிடிக்கப் பேசினார் தந்தை பெரியார். முதுமையின் காரணமாக உடல் நலிவுற்ற நிலையிலும் எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அவர்களது உற்சாகத்தைத் தீர்மானித்தது உடல் அல்ல; வயது அல்ல; வாழ்வியல் சூழல் அல்ல; சமூகச் சூழலே அவர்களை இயக்கியது, இத்தனை ஆண்டுகள் வாழ வைத்தது. அத்தகைய சமூகச் சூழலுக்காகப் போராடுவதும் வாதாடுவதும் சிந்திப்பதும்தான் சங்கரய்யா போன்றவர்களை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது!

பெரியார் ஓய்வு எடுத்தது இல்லை. ‘நான் சாப்பிடும் இரண்டு இட்லி, ஒரு மலைவாழைப் பழத்துக்காகவாவது நான் உழைக்க வேண்டும்' என்று சொன்னவர் அவர். சாய்வு நாற்காலியில் கூட உட்கார விரும்பாதவர் அவர். அதேபோல் தான், கைவலியுடனும் எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர். ‘இந்தப் பேனாவை என்னிடம் இருந்து பறித்தால் செத்துவிடுவேன்' என்று சொன்னவர் அவர்.

இவர்களை இயக்கியது உடல் அல்ல; வயது அல்ல; வாழ்க்கைச் சூழல்அல்ல; சமூகச் சூழலே அவர்களை இயக்கியது! இதனைத்தான் சங்கரய்யாவின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. இளமையில் அரசியல் தீவிரம் அதிகமாக இருக்கும். காலப்போக்கில் அது குறையும். முதுமையைக் காரணம் காட்டி அரசியல் விலகல் அதிகம் இருக்கும். அதுவேகூட காரணமாகக் காட்டப்படும். ஆனால் அழுத்தமான கொள்கைவாதிகளுக்கு முதுமை வரவரத்தான் அரசியல் அழுத்தம், அரசியல் ஆர்வம் அதிகம் ஆகும். ‘நாம் அன்று பார்த்த சமூகம், இன்னமும் அப்படியே இருக்கிறதே' என்ற வேதனையே இதற்குக் காரணம். இதனைத்தனது இறுதி உரையில் பெரியாரே குறிப்பிட்டார்.

‘நான் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டேன். பலருக்குப் படிப்பு கிடைத்தது. சிலருக்கு வேலை கிடைத்தது. அதற்குமேல் என்ன சாதித்துவிட்டேன்? இன்னமும் உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுத் தானே சாகப்போகிறேன்' என்றார் பெரியார். கொள்கைவாதிகளை, கோட்பாட்டாளர்களை இதுதான் இயக்குகிறது.

‘நான் முதலமைச்சர் ஆகிவிட்டேன். ஆனாலும் தம்பி, இது எந்த அதிகாரமும் இல்லை. எல்லாமே டெல்லியில்தான் இருக்கிறது' என்று தனது இறுதி மடலில் முதலமைச்சர் அண்ணா எழுதினார். கொள்கைவாதிகளுக்கு, கோட்பாட்டாளர்களுக்கு எப்போதும் நினைப்பு சமூகத்தைச் சுற்றியதாகவே இருக்கும். பெரியார், அண்ணா, கலைஞர் தொடங்கி சங்கரய்யாக்கள் வரை அவர்களை இயக்குவது ரத்தமோ, மூச்சோ, உடல்நலமோ, வயதோ அல்ல. இந்தச் சமூகம்தான் இயக்குகிறது.

‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே தோழா தோழா' என்று பாடும் போது சங்கரய்யாவின் காது சிவக்கிறது. உள்ளத்தில் இருந்து உதட்டுக்கு ரத்தம் பீறிடுகிறது. வார்த்தைகள் அவரைத் தாண்டி ஒலிக்கிறது. அடக்கமுடியாமல் கண்களில் இருந்து தண்ணீர் வழிகிறது.

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - எங்கள் கண்ணீரால் காப்போம்' என்ற பாரதி பாட்டுக்கு இலக்கணமாக அந்த இடத்தில் நின்றார் சங்கரய்யா. அந்தஅழுகையில் அரை லிட்டர் ரத்தம் ஊறியிருக்கும். அதுதான் நூறு ஆண்டுகள் கழிந்த உற்சாகத்துக்குக் காரணம். மதவாதம் கூடாது, வகுப்புவாதம் கூடாது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். விவசாயிகளும் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதை உரக்கச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்தத்தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்தி வருகிறார். சிறந்த தமிழனாக இருக்கச் சொல்கிறார். அந்த சிறந்த தமிழன் சாதியற்றவனாக, தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவனாக இருக்கச் சொல்கிறார். இன்றையமாணவனை கல்வியில் சிறந்தவனாக மட்டுமல்ல; சமூகத்தில் சிறந்தவனாக வளரச் சொல்கிறார். கூட்டமாய் திரட்டுவது தேவையில்லை, கொள்கையாய் திரட்டச் சொல்கிறார்.

‘இளைஞர்கள் மத்தியில் சாதி,மதவெறிகளுக்கு எதிரான எண்ணம் கொழுந்துவிட்டு எரியவேண்டும். நாட்டின் ஏழை எளிய சாதாரண மக்களுக்கு புதிய வாழ்க்கை அளிப்பதற்கு மக்களின் ஒற்றுமை தேவைப்படுகிறது' என்பதே சங்கரய்யாவின் அழுத்தமான பாடமாக இருக்கிறது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், சுதந்திரத்துக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தாலும், தியாகிகளுக்கான ஓய்வூதியம் அவர் பெறவில்லை. ‘சுதந்திரத் துக்காக சிறைக்குப் போனதே பரிசுதான்' என்று சங்கரய்யா சொன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் எழுதுகிறார். பிரதிபலன் எதிர்பாராத சமூகப் பணியையே தோழர் சங்கரய்யா சொல்கிறார்.

“பொதுவாழ்வு என்பது தண்ணீர்ப் பந்தலைப் போன்றது. தண்ணீர் குடித்தவர்கள் யாரும் தாகம் தணிந்ததாக தண்ணீர்ப் பந்தலிடம் வந்து நன்றி சொல்வது இல்லை. தண்ணீர்ப் பந்தலும் அதனை எதிர்பார்ப்பது இல்லை'' என்றார் பெரியார். தோழர் சங்கரய்யாக்கள், தண்ணீர்ப் பந்தலைப் போன்றவர்கள்!`

Also Read: சிறந்த முதல்வர்கள்: முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மூன்றே மாதத்தில் சாதனை - உதயநிதி பெருமிதம்!