M K Stalin

மோடிஜி Where Is LPG? என்று கேட்கும் மக்களுக்கு பிரதமரின் பதில் என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (04-04-2026) சங்கரன்கோவிலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:-

அந்நிய ஆதிக்கத்திற்கு தலைகுனிய மாட்டோம் என்று விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட, மாவீரர் பூலித்தேவரும், உயிரையே துச்சமாக நினைத்து செயல்பட்ட தளபதி ஒண்டிவீரனும் வாழ்ந்த மண்ணில், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடக்கூடாது என்று சொல்வதற்காக தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவைக் கேட்டு உங்களிடம் நான் வந்திருக்கிறேன்.

ஏழாவது முறையும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும்; திராவிட மாடல் 2.0-வில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடைய வேண்டும் என்று உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். திராவிட மாடல் 2.0-வுக்கு நான் ரெடி? நீங்கள் ரெடியா? ரெடி (மக்கள்). அதற்கு இந்த மேடையில் நிற்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா? தயார் (மக்கள்).

முதலில், வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய வெல்லும் வேட்பாளர் மாவட்டச் செயலாளர் தம்பி ஈ. ராஜா அவர்கள். இளைஞரணியில் இருந்து வளர்ந்து, இன்று மாவட்டச் செயலாளராக உயர்ந்திருக்கிறார். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.–வாக சிறப்பாகப் பணியாற்றியவர். சங்கரன்கோவிலுக்கு பல்வேறு திட்டங்களை வாங்கித் தந்தது போன்று, வாசுதேவநல்லூருக்கும் நிச்சயம் வாங்கித் தருவார். தம்பி ராஜாவுக்கு வாசுதேவநல்லூர் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, தென்காசித் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் தம்பி கலை கதிரவன் அவர்கள். பல ஆண்டு காலமாக என்னுடைய நிழலாக பணியாற்றி வரும் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன்தான் கலை கதிரவன். மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி, இப்போது மக்கள் பணிக்காக வந்திருக்கிறார். தம்பி கலை கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.

அடுத்து, ஆலங்குளம் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் வழக்கறிஞர் அருமைச் சகோதரர் மனோஜ் பாண்டியன் அவர்கள். முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய பி.எச். பாண்டியன் அவர்களின் அன்பு மகன்! இரண்டு முறை எம்.எல்.ஏ! மாநிலங்களவை உறுப்பினர்! எப்போதும் தொகுதி மக்களுக்காக உழைப்பவர்! திரு. மனோஜ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, கடையநல்லூர் தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நம்முடைய வெல்லும் வேட்பாளர் தி.மு. ராஜேந்திரன் அவர்கள். மாணவர் தி.மு.க.வில் போராட்டக் குணத்துடன் வளர்ந்தவர். தென் மாவட்டத்தில் அண்ணன் வைகோ அவர்களின் அன்பைப் பெற்றவர்! மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்! முப்பது ஆண்டுகள் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடியவர்! கொள்கை தோழமையான தி.மு. ராஜேந்திரன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.

அடுத்து, சங்கரன்கோவில் தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளர் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் திரு. கணேசன் அவர்கள். முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. அருணாசலம் அவர்களின் தம்பி மகன்தான் அவர்! மாணவராக இருந்தபோதே மக்கள் பணியில் ஈடுபட்ட இவர், இன்று சங்கரன்கோவில் வேட்பாளராக வந்திருக்கிறார்! திரு. கணேசன் அவர்களுக்கு கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை நீங்கள் எல்லாம் அளிக்க வேண்டும்.

தென்காசி மாவட்ட மக்கள் இந்த ஐந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பீர்களா? வைப்போம் (மக்கள்). வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). வெற்றி உறுதி என்று சொல்லிவிட்டார்கள். வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம்.

இன்றைக்கு, நாங்கள் கொள்கைக் கூட்டணியோடு வந்து வாக்கு கேட்கிறோம். இன்னொரு பக்கம், பா.ஜ.க.வும் - அ.தி.மு.க.வும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களால் தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார்கள் என்று ஏதாவது சொல்ல முடிகிறதா? எந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை இன்றைக்கு அவர்களுக்கு! கூட்டணியாக இருந்தாலும் அதில் பல பேர் பழனிசாமியை ஏற்றுக் கொள்ள மாட்டோம்; N.D.A.தான் எங்கள் முகம் என்று சொல்கிறார்கள்!

அந்தக் கூட்டணியின் இலட்சணத்தை சொல்கிறேன் பாருங்கள். “பழனிசாமி அவர்கள் ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்குகூட தகுதியில்லாதவர்” என்று அந்தக் கூட்டணியில் இருக்கும், அன்புமணி சொன்னார். அவர் இன்னும் நிறைய சொன்னார். நாகரிகம் கருதி அதையெல்லாம் நான் இந்த மேடையில் சொல்ல விரும்பவில்லை.

அதேபோன்று, பழனிசாமியின் திடீர் பங்காளியாகக் கூட்டு வைத்திருக்கும் டி.டி.வி. தினகரன் அவர்கள், “பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதை, நான் விரும்பவில்லை. வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். அதைவிட தூக்கில் தொங்கிவிடுவோம்” என்று சொன்னார்.

பா.ஜ.க.வில் இருப்பவர்கள் இன்னும் மோசமாகப் பேசினார்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட இவர்கள் ஊழலால் ஒன்று சேர்ந்து, தங்களின் குடுமியை அமித்ஷாவிடம் கொடுத்து, N.D.A. டப்பா எஞ்சினில் இன்றைக்கு வந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் பிரச்சார யுக்தி என்பது, அவதூறு பரப்புவது! பொய்களைப் பேசுவது! மக்களைப் பிளவுப்படுத்துவது!

ஆனால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது, கொள்கைகளையும் சாதனைகளையும் மேடைக்கு மேடை நெஞ்சை நிமிர்த்தி முழங்கும் கூட்டணி! தமிழ்நாட்டு நலன் என்ற ஒற்றைக் கோட்டில் நின்று, பா.ஜ.க. - அ.தி.மு.க. துரோகங்களை எதிர்க்கும் கூட்டணி! தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக, திட்டங்களையும் – சாதனைகளையும் செய்யும் கூட்டணி! அதனால்தான், திராவிட மாடல் அரசின் மாநில அளவிலான முத்திரைத் திட்டங்களை மட்டுமல்ல; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் செய்திருக்கும் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் இன்றைக்கு நம்மால் சொல்ல முடிகிறது!

அந்த வகையில் நம்முடைய தென்காசிக்கு செய்திருக்கும் திட்டங்களைப் பட்டியல் போடட்டுமா…

கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, கடையத்தை உள்ளடக்கிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கியிருக்கிறோம்.

குற்றாலத்தில் சுற்றுலா வளர்ச்சிக்காக 11 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

தென்காசி, காசிவிசுவநாதர் ஆலயத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு செய்திருக்கிறோம்.

15 ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் கட்டியிருக்கிறோம்.

குத்தம்பாஞ்சான், மகேந்திரவாடி, கழுநீர்குளம், கம்பனேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சமுதாயக் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

சொக்கம்பட்டி, பெரும்புத்தூர், கூடலூர், பருவக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உணவு தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது!

ஆலங்குளம், சிவகிரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்,

ராவுத்தபேரியில் எலுமிச்சை சிறப்பு மையம்,

நடுவக்குறிச்சியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை,

வினைதீர்த்த நாடார்பட்டி பள்ளியில் வகுப்பறைகள்,

தென்காசி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு,

மேலக்கரை நல்லூரில் சுகாதார மையம்,

ஆழ்வார்குறிச்சி, குற்றாலம், திருவேங்கடம், பண்பொழி உள்ளிட்ட 13 ஊர்களில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்,

இலஞ்சியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்திருக்கிறோம்.

சங்கரன்கோவிலில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, கடந்த அக்டோபரில் நான் தென்காசிக்கு வந்தபோது, குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தின் நீர்த் தேவைகளை நிறைவு செய்ய, புதிய குடிநீர்த் திட்டம்,

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்,

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டடம்,

சிவகிரி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் இருக்கும் விவசாயிகளுக்காக, பல்வேறு முக்கியக் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள்,

கடனா அணையும் சீரமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டது.

அதனால்தான், தெம்போடும், உரிமையோமும், சொன்னதைச் செய்த கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 2021-இல் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, கொடுக்காத வாக்குறுதிகள் பலவற்றை, மற்ற மாநிலங்களும் பின்பற்றும் திட்டங்களாக உருவாக்கி, அதை செயல்படுத்திக் கொடுத்திருப்பவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

அதில் சிலவற்றை மட்டும் ஹைலைட்–ஆக நான் சொல்ல விரும்புகிறேன்.

முதல் நாள் – முதல் கையெழுத்தில் உருவாகியிருக்கும் மகளிருக்கு கட்டணமில்லாத விடியல் பயணம்! பெண்கள் எல்லோரும் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கிறார்கள். தாய்மார்கள் இங்கு உட்கார்ந்துள்ளீர்கள். சொல்லுங்கள். விடியல் பயணத்தில் பயணிக்கிறீர்களா, இல்லையா? ஆமாம் (மக்கள்).

மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத்தொகை தருவோம் என்று சொன்னேன். ஒரு கோடியே 31 இலட்சம் மகளிரின் பேங்க் அக்கவுண்ட்டில் மாதம்தோறும் வந்து சேருகிறதா? இல்லையா? சொல்லுங்கள். ஆமாம் (மக்கள்).

அதேபோன்று, காலை உணவுத் திட்டத்தைப் பற்றி நான் வாக்குறுதியில் சொல்வில்லை. ஆனால், பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளைப் பார்த்து, காலை உணவுத் திட்டத்தை தொடங்கினேன். 19 இலட்சம் குழந்தைகள் காலை உணவு சூடாக, சுவையாக, சத்தாக சாப்பிடுகிறார்கள்.

நான் முதல்வன் திட்டமும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை! ஆனால், இன்றைக்கு எத்தனை ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ் இந்தத் திட்டத்தால் உருவாகி இருக்கிறார்கள் என்று நீங்களே செய்திகளில் பார்த்திருப்பீர்கள்!

அடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டங்கள்தான் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள். 9 இலட்சம் மாணவ–மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாட 3,000 ரூபாய் வழங்கினோம். 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு எல்லோருக்கும் வந்ததா? வந்தது (மக்கள்).

அதேபோன்று, மகளிர் உரிமைத் தொகையை தேர்தலைக் காரணம் காட்டி அதை தடுப்பதற்கு திட்டம் போட்டார்கள். அதையும் முன்கூட்டியே நான் தெரிந்துகொண்டு, மூன்று மாதங்களுக்கான தொகையையும், கோடை காலச் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 5 ஆயிரம் ரூபாயை அட்வான்சாக கொடுத்தோம். அந்த 5 ஆயிரம் ரூபாய் உங்களுக்கெல்லாம் வந்ததுதானே?

அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றி, சொன்னபடியே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.

இப்படி, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உருவாகியிருக்கும் இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டுபோக வேண்டும்! அதற்கான தெளிவான செயல்திட்ட அறிக்கையாக இந்தத் தேர்தலின் சூப்பர்ஸ்டாரை களமிறக்கியிருக்கிறோம்! நம்முடைய தேர்தல் அறிக்கையில் நான் சொல்லியிருக்கும் அறிவிப்புகளை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களிலும் படித்திருப்பீர்கள். இந்த புத்தகம் உங்கள் கைக்கு வந்து சேர்ந்தாலும் சேர்ந்திருக்கும். ஹைலைட்டாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சில வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

மாதம்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்பதை டபுள் மடங்காக இனி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க போகிறோம்! என்ன மகிழ்ச்சிதானே? கை அசைத்து காண்பியுங்கள்.. மகிழ்ச்சி (மக்கள்)

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், காலை உணவுத் திட்டத்தை இதுவரை 5–ஆம் வகுப்பு வரை கொடுத்துக்கொண்டிருந்தோம். அதையும் உயர்த்தி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம்! அதனால் 15 இலட்சம் மாணவர்கள் மேலும் பயன்பெற போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப் போகிறது.

அடுத்து, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம். அது என்ன? எவ்வளவு ரூபாய்? தாய்மார்கள் சொல்லுங்கள்… அதுதான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன்! இல்லத்தரசிகள் தங்களின் வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவென், இண்டக்‌ஷன் அடுப்பு போன்ற வீட்டிற்குத் தேவையாக உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு வாங்கிக்கொள்ளவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்கு பிடித்த கடைகளிலேயே உங்களுக்கு பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாக பார்த்து, இந்த பொருட்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. இங்கு பெண்கள் இருக்கிறீர்கள். பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, உங்களுக்கு பிடித்த கடையில், உங்களுக்கு பிடித்த டிசைனில், உங்களுக்கு பிடித்த கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதை மனதில் வைத்துதான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இல்லத்தரசி திட்டத்தில் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் எல்லாமே ‘உங்கள் சாய்ஸ் தான்! அதனால்தான், இந்தத் திட்டத்தை பெண்கள் பெரும்பாலும் வரவேற்கிறார்கள்! இந்த திட்டத்தால் பொருளாதாரம் உயரும் என்று உணர்ந்து வணிகர்களும் வரவேற்கிறார்கள்!

அதேபோல், உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களையும், விவசாய பெருங்குடி மக்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். எல்லோரும் பழைய பம்பு செட்டு வைத்திருப்பீர்கள். அதில் சில அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக கரண்ட் செலவாகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள். அதை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அரசே இனி வாங்கித் தரும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இன்னும் இருக்கிறது,

உயர்கல்வி படிக்கும் 35 இலட்சம் மாணவர்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

அதுமட்டுமல்ல. வட மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம், டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம், மேற்கு மாவட்ட சிறப்பு வளர்ச்சித் திட்டம், தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் ஆகியவை 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டத்தால் தென் மாவட்டங்கள் அனைத்தும் வளரப் போகிறது.

நாங்கள் சொன்னால், சொன்னதை செய்வோம்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்! கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி! இப்போது நான் பட்டியலிட்டு சொன்ன மாதிரி, தன்னுடைய சாதனைகள் என்று பழனிசாமியால் பட்டியலிட முடியுமா? நிச்சயம் முடியாது!

ஏன் என்றால், அ.தி.மு.க.வின் கடந்தகால தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் வந்துவிட்டதா? சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்ன ஆனது? இல்லை. தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’ எங்கே? இல்லை. 10 ஆடை அலங்கார பூங்காக்கள் வந்துவிட்டதா? 58 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ். ஒரே ஒருவருக்காவது கொடுத்தார்களா? எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்குவோம் என்று சொன்னார்களே? என்ன ஆனது? பொது இடங்களில் இலவச 'வை-ஃபை' என்று சொன்னது என்ன ஆனது? அதுவும் இல்லை. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இருசக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் என்று சொன்னார்களே, அது எந்த ஊரில் இருக்கிறது? அனைத்து பெண்களுக்கும் ஸ்கூட்டர் கொடுத்துவிட்டார்களா? இன்னும் பெரிய லிஸ்டே இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு கூட மூடுவிழா நடத்தியவர்தான், உதவாக்கரை பழனிசாமி.

இப்படி, தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை எல்லா துறையிலும் படுகுழியில் தள்ளிய அ.தி.மு.க.வும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்கு கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு இந்த தேர்தலிலும் வழக்கம்போல் படுதோல்வியைதான் நீங்கள் பரிசாக தர வேண்டும்! டபுள் எஞ்சின் டப்பா எஞ்சினில் வரும் அவர்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவே கூடாது! N.D.A. என்பது, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாத கூட்டணி! பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று ஏழைகளின் சுருக்குப் பையில் இருந்துகூட பணத்தை உருவினார்கள். மக்கள் எல்லோரும் ஏ.டி.எம். வாசலில் நின்றார்கள். கொரோனா காலத்தில் தட்டை தட்டுங்கள், மணியை ஆட்டுங்கள் என்று ஆக்சிஜன் சிலிண்டருக்கு வரிசையில் காத்துக்கிடக்க விட்டார்கள். இப்போது மக்கள் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சமையல் சிலிண்டருக்காக காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி! இன்றைக்கு நாட்டு மக்கள் முழுவதும் ஒரே குரலில் என்ன கேட்கிறார்கள் என்றால், “மோடிஜி, வேர் ஈஸ் எல்.பி.ஜி”என்று கேட்கிறார்கள். இதற்கு பிரதமரிடம் பதில் இருக்கிறதா? இந்த இலட்சணத்தில் தொடர்ந்து, சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, டோல்கேட் கட்டணம் என்று உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஓட்டல்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் குடும்பங்களுக்கும் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார்? தேர்தல் காலத்திலேயே இப்படி விலையை உயர்த்துகிறார்கள் என்றால் தேர்தல் முடிந்ததும் எப்படி உயர்த்துவார்கள்? அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க தொடைநடுங்கி பழனிசாமிக்கு தெம்பு இருக்கிறதா? இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமா?

இன்னொரு முக்கியமான பிரச்சினை. நீங்கள் பத்திரிகையில் படித்திருப்பீர்கள்? நேற்று CBSE பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்று காலையில் அதற்கு என்னுடைய விரிவான கண்டனத்தை நான் பதிவிட்டிருக்கிறேன். கடிதமும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

நாம் அமைதியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிக்க ஏதாவது செய்து, தமிழ்நாட்டில் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்ளும் வேலையை பா.ஜ.க. அரசு சிறப்பாக செய்கிறார்கள்.

அதில் இப்போது, லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா?

அதற்கு, ஒன்றிய கல்வி அமைச்சர் மிஸ்டர் தர்மேந்திர பிரதான், நான் போட்ட செய்திக்கு (ட்வீட்) என்ன ரியாக்ட் செய்திருக்கிறார் தெரியுமா? "தமிழ்நாட்டில் கல்வித் தரம் வளர விடாமல் நாம் தடுக்கிறோம்" என்று பேசியிருக்கிறார். நான் கேட்கிறேன், இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்வதற்கும் - கல்வித் தரத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதுமட்டுமல்ல, ஏற்கெனவே இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்று நமக்கான கல்வி நிதியை இன்று வரை விடுவிக்காமல் இருப்பவர்தான் இந்த தர்மேந்திர பிரதான் அவர்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எனும் இந்திக் கொள்கையை உள்ளே விடவில்லை என்ற காரணத்திற்காகவே, "தமிழர்களை நாகரிகம் இல்லாதவர்கள்" என நாவடக்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பேசி, அதற்குப் பிறகு மன்னிப்பு கேட்டவர்தான் இந்த பிரதான் அவர்கள்.

நான் அவருக்கும் - பிரதமர் மோடி அவர்களுக்கும் - அமித் ஷா அவர்களுக்கும், ஒரு 'ஓப்பன் சேலஞ்ச்' செய்கிறேன். தமிழ்நாட்டுக்கு நீங்கள் பிரசாரத்துக்கு வரும்போது, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி, பிரசாரம் செய்யும் தைரியம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா? வாருங்கள், வந்து பேசுங்கள் பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அவர்களே... உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் ஒருவேளை இருந்தால், கட்சிக்கொடியில அண்ணா படம் வைத்திருக்கிறீர்களே... இருமொழிக் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்று பேசுகிறீர்களே... மும்மொழிக் கொள்கை தொடர்பான அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்தை கண்டித்து, உங்களால் அதை திரும்பப் பெற வைக்க முடியுமா? சவால் விடுகிறேன்… அவர் உங்கள் கூட்டணிதானே? முடியுமா? சொல்லுங்கள்.

"இந்தியைக் கட்டாயமாக திணிக்கும் PM-SHRI பள்ளியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்காமல் தி.மு.க. அரசு தடுக்கிறது" என்று வேறு அமைச்சர் பிரதான் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இப்படி சொன்னால் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கான ஆதரவு இன்னும் அதிகரிக்குமே தவிர, குறையாது! நீங்கள் இன்னும் இதையே புரிந்து கொள்ளாமல் இருக்கும் காரணத்தினால்தான், இப்போது வரை நோட்டாவுடன் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

இந்தியாவிலேயே அதிக பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

மாவட்டம்தோறும் மாதிரிப் பள்ளிகள் திறந்திருக்கிறோம். 19 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறோம். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்திருக்கிறோம்.

இப்படிபட்ட தமிழ்நாட்டிலேயா கல்வித்தரம் சரியில்லை? எங்கே வந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நான், தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி என்று சொல்லும்போதெல்லாம், "ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?" என்று பழனிசாமி கேட்பாரே… இப்போது புரிகிறதா? நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று. பழனிசாமி போன்றவர்களை விட்டால் தமிழ்நாட்டை டெல்லிதான் ஆட்சி செய்யும். நாம் என்ன மொழி படிக்க வேண்டும், எத்தனை மொழி படிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று, நாம் முடிவு செய்ய முடியாது. டெல்லியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலை அழுத்தி, அதற்கு ஏற்றவாறு இங்கு அ.தி.முக.வை ஆப்பரேட் செய்வார்கள். ரிமோட்டில் அங்கு ஆபரேட் செய்தால், இங்கு பழனிசாமி ஆடுவார். இப்படிப்பட்ட சீரழிவை ஏற்கெனவே 4 ஆண்டு காலமாக பழனிசாமி பேரில் நடந்த பா.ஜ.க.வின் பிராக்சி ஆட்சியில் தமிழ்நாடு பார்த்துவிட்டது. இனி, அப்படி நடக்க விடவேமாட்டோம்!

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க.வையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அ.தி.முக. உள்ளிட்ட கட்சிகளையும், வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது! நம்முடைய ஸ்பீடு என்னவென்று காட்டிவிடலாமா? வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? ஒரு கை பாத்துவிடலாமா? நடக்க இருக்கும் இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அதை உணர்ந்து, அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, எல்லோரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்!

வாசுதேவநல்லூர் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் ஈ.ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

தென்காசி தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கலை கதிரவன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆலங்குளம் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மனோஜ் பாண்டியன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

கடையநல்லூர் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தி.மு.ராஜேந்திரன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

சங்கரன்கோவில் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த கணேசன் அவர்களுக்கு, கை சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞரின் மகனாக உங்களிடம் கேட்கிறேன், அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தன்னிகரில்லா தமிழ்நாடு உருவாகும்! அதற்கு, ஆதரிப்பீர் உதயசூரியன்! நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! உதயசூரியன், உங்கள் சூரியன்!

வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Also Read: தமிழ் மண்ணில் மும்மொழி கொள்கையை கூறி வாக்கு கேட்க முடியுமா?: தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் சவால்!