M K Stalin

வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை சார்பில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கோயில் மலையாற்றின் குறுக்கே 176.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய அணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 200.66 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 120.23 கோடி ரூபாய் செலவில் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மறுகட்டுமானங்களைத் திறந்து வைத்தார்கள். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தினை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும், பருவமழைக்காலங்களில் கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும், பாசன கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

=> வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் சிறிய அணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் :

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், மேலரசம்பட்டு கிராமம் அருகே கோயில்மலையாற்றின் குறுக்கே 176.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய அணை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், மேல் அரசம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசம்பட்டு காடு மற்றும் கருத்தமலை காட்டிற்கும் இடையில் கோயில் மலையாற்றின் குறுக்கே  இந்த சிறிய  அணை  அமைக்கப்படவுள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 74.438  மி.க. அடி ஆகும். இவ்வணை 310 மீட்டர் நீளமும், 10.50 மீட்டர் உயரமும் மற்றும் 5 மீட்டர்  மேல்மட்ட அகலமும் கொண்ட  மண்  அணை கரை அமைக்கப்பட  உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அணையின் இடது புறத்தில் சுமார் 326 க.அடி வீதம் நீர் செல்லும் வகையில் அவசர கால மதகுடன் கூடிய ஆற்றுமதகு  கட்டப்பட்டு விவசாய பயன்பாட்டிற்காக 5 ஏரிகளுக்கு முறையாக நீர் வழங்கிட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 1685.82 ஏக்கர் விவசாய நிலம் நிலைப்படுத்தப்படுவதோடு, 167.41  ஏக்கர் வறண்ட பாசன நிலங்கள் பயன் பெறுவதோடு, அப்பகுதிகளில் உள்ள கிணறுகள் செறிவூட்டபடுவதன் மூலம்684   ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.

=> முடிவுற்ற நீர்வளத் திட்டப் பணிகளை திறந்து வைத்தல் :

புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களின் அருகே 200.66 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள பாலாறு அணைக்கட்டினை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

பாலாறு அணைக்கட்டானது பாலாறு ஆற்றின் குறுக்கே தொலைக்கல் 244 கி.மீட்டரில் வாலாஜா வட்டம் திருமலைச்சேரி மற்றும் ஆற்காடு வட்டம் புதுப்பாடி ஆகிய கிராமங்களுக்கிடையே 1858-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டானது 801 மீட்டர் நீளமும், 3.10 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்த அணைக்கட்டானது ஆண்டிற்கு 150 மி.கன அடி நீரினை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டானது அதிகப்படியாக வினாடிக்கு 1,75,000 க.அடி வெள்ளநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டானது இரு புறங்களிலும் 39  மணற்போக்கிகள் மற்றும் 84.26 கி.மீ நீளம் கொண்ட 4 பிரதான கால்வாய்கள் வழியாக ஒரே நேரத்தில் வினாடிக்கு 6124 கன அடி தண்ணீர் திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து செல்லும்  4 பிரதான கால்வாய்களின் மூலம் இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சார்ந்த வேகவதி, செய்யாறு, கீழ்பாலாறு, கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆகிய உபவடிநிலங்களில் உள்ள 319 ஏரிகளுக்கு நீர் வழங்கி அதன் மூலம் சுமார் 77510.65 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெறும். இந்த அணைக்கட்டு புனரமைத்ததின் மூலம் 4 மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 4,25,000 விவசாயிகள் பயன் பெறுவர்.

=> மதுராந்தகம் ஏரியினை ஆழப்படுத்தி கொள்ளளவினை உயர்த்துதல் உள்ளிட்ட முடிவுற்ற பணிகள் :

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் ரூபாய் 120.23 கோடி செலவில் ஆழப்படுத்தி, உபரி நீர்ப் போக்கிகளை அமைத்தல் பணிகள் மூலம் மீள கட்டமைக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். 

மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவினை உயர்த்தியுள்ளதால், சுமார் 3077.47 ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இந்த பாசன ஆயக்கட்டு நிலங்கள் ஆண்டுக்கு மூன்று முறை விவசாயப் பணிகள் மேற்கொள்ள நீர்ப்பாசனவசதி கிடைக்கப் பெறுகிறது.  ஏரியினை சுற்றியுள்ள மதுராந்தகம், அனுமந்தக்குப்பம், புதுப்பட்டு, பசும்பூர், பில்லாந்திக்குப்பம், குண்ணவாக்கம், வேடந்தாங்கல் மற்றும் தண்டரை போன்ற சுற்று வட்டார கிராமங்களுக்கு நிலத்தடிநீர் மேம்பாட்டினையும் உறுதி செய்யப்படுகிறது.  

Also Read: இறந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் அந்த மனசு இருக்கே... தானமாக வழங்கப்பட்ட தோழர் நல்லகண்ணுவின் உடல்!