M K Stalin

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு & சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கைகள்... வெளியிட்டார் முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.01.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை (Tamil Nadu Warehousing Policy) 2026 ம‌ற்று‌ம் தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கை (Tamil Nadu Circular Economy Investment Policy) 2026 ஆகிய துறை சார்ந்த கொள்கைகளை வெளியிட்டார். 

தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், அதிக தொழில்வளம் மிகுந்த மாநிலமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாட்டை நிலையான உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றியமைக்கும் நோக்கில், உலகளாவிய தொழில் சூழலமைப்பு மற்றும் மாநிலத்தின் தேவைகள், ஆகியவற்றை கருத்திற்கொண்டு, துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று இவ்விரு கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Tamil Nadu Warehousing Policy 2026

=> தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை (Tamil Nadu Warehousing Policy) 2026

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு, வலுவான சரக்கு போக்குவரத்து (Logistic) கட்டமைப்பு உதவி புரிந்து வருகிறது. இந்த வளர்ச்சியில் சேமிப்புக் கிடங்கு கட்டமைப்பு (Warehousing Infra) மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. எனவே, இக்கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த புதிய கிடங்கு கட்டமைப்பின் வளர்ச்சி (Integrated Greenfield Development), பழைய கிடங்குகளின் திறன் விரிவாக்கம் (Brownfield Capacity Expansion), கிடங்கு துறையில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public, Private Partnership in Warehousing), நிலையான மற்றும் நவீன தொழில்நுட்ப கிடங்குகள் (Sustain & Smart Warehousing), பொருட்களுக்கேற்ற பிரத்யேகக் கிடங்குகள் (Commodity Specific Warehousing) மற்றும் கிடங்குத் துறையில் தொழில் புரிவதற்கு உகந்த எளிய வழிமுறைகள் (Ease of doing Business for Warehousing) ஆகிய 6 கருப்பொருட்களைக்கொண்ட தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது. 

=> சிறப்பம்சங்கள்

டெல்டா மற்றும் தொழில் துறையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கு நிதி சார்ந்த சிறப்பு ஊக்க சலுகைகள் வழங்குதல். குறிப்பாக, தகுதியான முதலீடுகளில் 25 சதவிகித நிலையான மூலதன மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்) மற்றும் நில விலை மானியமாக வணிக நில விலையில் 50 சதவிகித சலுகை;

புதிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கும்போது மேற்கொள்ளப்படும் பசுமை முன்முயற்சிகளுக்கான மதிப்பில் 25 சதவிகித மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்);

பயிற்சி மானியம் - புதிய சேமிப்புக் கிடங்குகளின் பணியாளர்களுக்கு தொழிற்நுட்ப பயிற்சி வழங்குவதற்கான தொகையில் 50 சதவிகித மானியம் (ஒரு பணியாளருக்கு ரூ.10,000/- க்கு மிகாமல்); 

அரசு நிலங்களில் பெரிய அளவிலான புதிய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கு சிறப்பு ஊக்க சலுகைகள்;

பெரிய அளவிலான சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் நிறுவுவதற்கான முதலீட்டில் 12 சதவிகித மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்);

தொழிற்நுட்பத் துறை, சுகாதார பாதுகாப்புத் துறை, பொறியியல் துறை மற்றும் வேளாண்மை துறைகளின் குறிப்பிட்ட பொருட்கள் சார்ந்த (Commodity specific) புதிய சேமிப்புக் கிடங்குகளில் தொழிற்நுட்ப முன்முயற்சிகளுக்கான செலவில் 25 சதவிகித மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்);

வணிகம் புரிவதற்கு உகந்த சூழலை வழங்கும் வகையில், வெள்ளை வகை நிலையை (White Category Status) சேமிப்புக் கிடங்குகளுக்கு நீட்டித்தல், ஒற்றை சாளர இணையம் மூலம் அனுமதிகள் வழங்குதல் மற்றும் அரசு தொழிற் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகளில் சேமிப்பு கிடங்குகளுக்கு நிலம் ஒதுக்கீடு.

Tamil Nadu Circular Economy Investment Policy 2026

=> தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கை (Tamil Nadu Circular Economy Investment Policy) 2026

உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் வர்த்தகத் தரங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், ஏற்றுமதி போட்டித்திறனை வலுப்படுத்துவதுடன், புதிய முதலீடுகள் ஊக்குவிப்பது, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சுழற்சி மற்றும் நிலையான உற்பத்தியில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் மேம்படுத்தி, நிலைத்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட வளர்ச்சியை முன்னெடுப்பதன் மூலம் மாநிலத்தை உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவது, தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கை 2026-ன் முக்கிய நோக்கமாகும்.

=> சிறப்பம்சங்கள்

சுழற் பொருளாதாரம் அடிப்படையிலான உற்பத்தியை விரைவாகப் பின்பற்ற முதன்மைத் துறைகளான ஜவுளி, வாகனத்துறை, மின்னணுவியல் மற்றும் நெகிழித் துறைகளில் தனிக்கவனம் செலுத்துதல்; 

மறுசுழற்சி உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், மறுசுழற்சி தொழிற்சாலைகளுக்கு முதலீட்டில் 10 சதவிகித மூலதன மானியம், ஒரு பணியாளருக்கு மாதம் ரூ.10,000 வீதம் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மானியம் மற்றும் ஒரு பணியாளருக்கு ரூ.10,000 வீதம் திறன் மேம்பாட்டு ஊக்குவிப்பு மானியம் வழங்குதல்; 

கழிவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (Technology Enablers/Platform Entities) முதல் ஆண்டில் 30 சதவிகிதம், இரண்டாம் ஆண்டில் 20 சதவிகிதம் மற்றும் மூன்றாம் ஆண்டில் 10 சதவிகிதம் ஊதிய மானியம் வழங்குதல்; 

சுழற்சி பொருளாதார தகவல் தளம், தமிழ்நாடு பசுமை காலநிலை நிதியம், குறைந்த கார்பன் பசுமை தொழிற்பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பசுமை தரவரிசை மதிப்பீடு போன்ற வழிமுறைகளால் இத்துறையை வலுப்படுத்துதல். 

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை 2026 ம‌ற்று‌ம் தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கை 2026 ஆகிய கொள்கைகள், இத்துறைகளில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக நிலை நிறுத்துவதுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதாரம் என்ற முதலமைச்சர் அவர்களது இலட்சிய இலக்கினை அடையவும் உதவும். 

Also Read: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 3-வது லட்ச நபர்... பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் !