
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்குடன் நடத்தப்படும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000 -ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக தொழில்நெறி வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் திறன்மிகு தொழில் வல்லுனர்களைக் கண்டடையும் மாபெரும் செயல்திட்டமாக இது விளங்குகிறது.
2021-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2026 வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக தமிழ்நாட்டில் 2,437 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 74,856 வேலையளிப்போர்களும், 15,62,205 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 5,099 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2,99,999 நபர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் கிடைத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் முதலமைச்சர் அவர்களால் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000 -ஆவது நபருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், கூடுதலாக 10 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.






