M K Stalin
“நவீன மலையாள இலக்கியத்தின் முகங்களுள் ஒருவர்...” - எழுத்தாளர் MT வாசுதேவன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் கடந்த 15-ம் தேதி காலை முதல் மூச்சுத் திணறல் காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் அவர் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிச. 25) இரவு காலமானார்.
எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
ஞானபீடம், பத்மபூஷன், சாகித்ய அகாடெமி உள்ளிட்ட உயர் விருதுகளை வென்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்துகிறேன்.
நாலுகெட்டு, அசுரவித்து, மஞ்ஞு, காலம் போன்ற நாவல்கள், நிர்ம்மால்யம், பெருந்தச்சன், ஒரு வடக்கன் வீரகாத போன்ற திரைப்படங்கள் வழியே கேரள மாநிலத்தின் சமூக மாற்றங்களை மிக நுணுக்கமாகப் படம்பிடித்துக் காட்டிய படைப்பாளராக அவர் திகழ்ந்தார்.
தமிழ், ஆங்கிலம் முதலிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நூல்களின் வழியே, மலையாளிகளைக் கடந்த பெரும் வாசகப் பரப்பைச் சொந்தமாக்கிக் கொண்டவர் அவர்.
மலையாளத் திரையுலகின் கிளாசிக்குகள் எனக் கருதப்படும் பல படங்களுக்கு வாசுதேவன் அவர்கள் திரைக்கதை எழுதியதோடு, தாமே சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார், தேசிய விருது முதலிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநராக மட்டுமன்றி மாத்ருபூமி இதழின் ஆசிரியராக இருந்து, பல இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுத்த வகையில் மலையாள மொழிக்கும் கேரளச் சமூகத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கு அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
நவீன மலையாள இலக்கியத்தின் முகங்களுள் ஒருவராக விளங்கிய எம்.டி. வாசுதேவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரது வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!