M K Stalin

“சமூக நீதியைக் காக்க அரசுக்கு ஆதரவாக தி.மு.க எப்போதும் நிற்கும்” : மு.க.ஸ்டாலின் உரை!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சமூக நீதியைக் காப்பாற்ற முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சமூக நீதிக் கொள்கைக்கு கிஞ்சிற்றும் சேதாரமில்லாமலும், நீர்த்துப் போகாமலும், காப்பாற்றுவதற்காக நாமெல்லாம் இன்று இங்கே கூடியிருக்கிறோம்.

சமூக நீதியின் ஊற்றுகண்ணாக - இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, முன்னோடியாக விளங்குகிறது தமிழகம்.

தமிழகத்தில் மட்டுமல்ல - இந்திய அளவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் "சமூக நீதி" மட்டுமே அடிப்படை அம்சம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ, தலைவர் கலைஞர் அவர்களோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோ, - ஏன் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களோ, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

7.6.1971-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக முதல்வர் கலைஞர் அவர்களால் உயர்த்தப்பட்டது. அதே அரசு ஆணையில், பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு, 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தப்பட்டு, இன்றைக்கு 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் சட்ட ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 69% இடஒதுக்கீடு, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு அவசர அவசரமாக 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கிய உரிமை பறிக்கப்பட தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. மருத்துவப் படிப்பில் 25% தருகிறோம் என்பதை நம்பி 10% இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

சமூக நீதியைக் காக்க, பிரதான எதிர்கட்சியான தி.மு.க அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் உணர்வு பூர்வமாக எல்லா வழியிலும் ஒத்துழைக்கும். நம் முன்னோர் நமக்கு வழங்கி இருக்கக்கூடிய இட ஒதுக்கீடு உரிமை விட்டு தரக்கூடாது.” என வலியுறுத்தினார்.