India
சிலிண்டர்களை பதுக்கினால் சிறை… எஸ்மா (ESMA) சட்டம் சொல்வது என்ன? - முழு தகவல் உள்ளே!
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தடைச்சட்டமான எஸ்மா (ESMA) அமல்ப்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான சேவைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக எஸ்மா (Essential Services Maintenance Act – ESMA) எனப்படும் சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாகும்.
இந்திய அரசு முதன்முதலில் 1968ஆம் ஆண்டில் எஸ்மா சட்டத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் 1981ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
மருத்துவ சேவை, மின்சாரம் வழங்கல், குடிநீர் விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தபால் போன்ற பல சேவைகள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமான தேவையாகும். இத்தகைய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதனைத் தவிர்க்கவும், சேவைகள் தொடர்ந்து நடைபெறவும் அரசு எஸ்மா சட்டத்தை தேவையின்போதும், அவசர சூழ்நிலை கருதியும் பயன்படுத்துகிறது.
பொதுவாக இந்தத் தடை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை அமலில் இருக்கும். எஸ்மா சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படலாம். சில சமயங்களில் இரண்டும் ஒன்றாகவும் விதிக்கப்படலாம்.
அத்தியாவசிய சேவைகள் எந்த சூழலிலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவசரநிலைகள், இயற்கை பேரிடர்களின் போது இந்தச் சட்டம் மிக முக்கியமானதாகிறது. இதன் மூலம் பொதுமக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதோடு, நாட்டின் அடிப்படை சேவைகள் தடையின்றி செயல்படுவதற்கும் உதவுகிறது.
தற்போது ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர்கள் விநியோகம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சமையல் சிலிண்டர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் தடைச்சட்டமான எஸ்மா (ESMA) அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக ரஷ்யா - உக்ரைன் போரின் போது கச்சா எண்ணெய் துறையில் ESMA விதிகளை ஒன்றிய அரசு செயல்படுத்தியது. அப்போது, உள்நாட்டில் எரிபொருள் தட்டுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதிக லாபம் கிடைக்கிறது என்பதற்காக ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.
கேஸ் சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் இந்த தடைச்சட்டம் தற்போது அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல், தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர் விற்பனை செய்தல் உள்ளிட்டவை இந்த சட்டத்தின்கீழ் குற்றமாகும்.
இச்சட்டத்தின் கீழ் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக பதுக்கும் பட்சத்தில், அபராதம், கைது நடவடிக்கை உள்ளிட்டவை எடுக்கப்படும்.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!