India

ஈரான்- இஸ்ரேல் போர் எதிரொலி : சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்... உயரும் டீ விலையால் அதிர்ச்சி!

ஈரான் - அமெரிக்கா, ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கூட்டுத்தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஈரானின் முக்கிய நிதி ஆதாரமாக இருந்துவரும் எண்ணெய் கிடங்குகளை அமெரிக்கா குறிவைத்து தாக்கி வருகின்றது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்தப் போர்ச்சூழல் காரணமாக மக்கள் தேவையின்றி முன்கூட்டியே சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

போர் பதற்றம் காரணமாக எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால் முன்பதிவுகள் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான (OMCs) வீட்டு பயன்பாட்டு LPG சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்ய 21 நாட்கள் இடைவெளி கட்டாயம் என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கொல்கத்தா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தொடங்கியதால், செயற்கையான முறையில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையை சீராக வைத்திருக்கவும் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒரு எல்.பி.ஜி சிலிண்டர் இணைப்பு கொண்டவர்கள் 21 நாட்கள் கழித்தும், இரண்டு சிலிண்டர் இணைப்பு கொண்டவர்கள் 30 நாட்கள் கழித்தும் தான் புதிய சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு 15 நாட்கள் கழித்தே மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதி இருந்த நிலையில், தற்போது அந்த கால இடைவெளி 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், போரின் காரணமாக தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் உணவகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் செயல்பாட்டை குறைத்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிவாயு இறக்குமதி தடை மற்றும் சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி விலை உயர்வு ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் உள்நாட்டு தேவையை சமாளிக்கும் வகையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோக நிறுத்தம் தமிழ்நாட்டில் உணவு, சிறு தொழில், வணிகத் துறைகளை பெரிதும் பாதித்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைத்தாலும், வணிக நிறுவனங்கள் மாற்று எரிபொருள்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போர் முடிவடையும் வரை இந்தத் தட்டுப்பாடு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னையில் டீ விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக ஏற்கனவே தேயிலை தூள் விலையும் உயர்ந்திருப்பதால், தற்போது வணிகப் பயனபாட்டு சிலிண்டர்களுக்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் இந்த விலையேற்றத்தை அமல்படுத்த உள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது, சென்னையில் ஒரு டீ-யின் விலை 12 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த விலையேற்றம் குறித்த செய்தி டீ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

Also Read: சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம்… இந்தியாவிற்கே வந்து மிரட்டிச் சென்ற அமெரிக்கா!