
டெல்லியில் ரைசினா டயலாக் 2026 (Raisina Dialogue) என்ற கருப்பொருளில் 2026 மார்ச் 5 முதல் 7ம் தேதி வரை புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டில் 110 நாடுகளிலிருந்து 2700-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அரசின் சார்பில் அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டாவ் கலந்து கொண்டார்.
அப்போது மாநாட்டில் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும்போது பல பொருளாதார சலுகைகளை வழங்கியது. இதன் விளைவாக சீனாவின் தொழில் மற்றும் பொருளாதார பல மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் சீனா உலகளவில் அமெரிக்காவின் முக்கிய போட்டியாளராக உருவாகியுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கு போட்டியாக எங்களுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்த அனுபவத்திலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொண்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

மேலும் ”அமெரிக்கா, இந்தியாவுடன் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் போது, சீனாவுடன் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் முக்கிய சக்தியாக உருவாகும் நாடாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. இதனால் இந்தியா–அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும் என்றும், இரு நாடுகளும் பல துறைகளில் இணைந்து செயல்படும் வாய்ப்பு அதிகம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி கட்டத்தை அடையும்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவும். ஆனால், எந்த ஒப்பந்தமும் அமெரிக்காவின் நலன்களை முதலில் கொண்டு மட்டுமே செய்யப்படும்.
அமெரிக்கா தற்போது பின்பற்றும் “America First” என்ற கொள்கையின் அடிப்படையில், மற்ற நாடுகளுடன் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தங்களும் அமெரிக்க மக்களுக்கு நியாயமானதாக இருக்கும் வகையில் இருக்கும் என்று லாண்டோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைசிறந்த நாடாக உருவாக வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். பல வர்த்தக விவகாரங்களில் இந்தியா எங்களை விட முன்னோக்கி செல்வதை நாங்கள் பார்க்கிறோம். மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும்.
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். எங்கள் நாட்டின் நலன் கருதியே நான் இங்கு வந்திருக்கிறேன். நமது கூட்டாண்மையை வலுப்படுத்துவது இந்தியாவிற்கும் நன்மை பயக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.






