India

RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!

தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு, நமது மாநிலத்தில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அமைச்சர் பிரியங்க் கார்கேவை மிரட்டி வருகிறார்கள்.

இது குறித்து பேசி இருக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கே, ”ஆர்எஸ்எஸ்காரர்கள் என்ன தனிச் சலுகை கொண்டவர்களா? எப்படி அவர்கள் பொதுவெளியில் தடிகளுடன் ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்? தலித்களோ பிற்படுத்தப்பட்ட சாதியினரோ தடிகளை வைத்துக் கொண்டு ஊர்வலம் நடத்தினால், விட்டுவிடுவார்களா? சட்டம் இருக்கிறது. சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா ஆர்எஸ்எஸ்காரர்கள்? அரசியல் சாசனத்தை விட பெரியவர்களா அவர்கள்? நிச்சயமாக கிடையாது.

கடந்த இரண்டு நாட்களாக என் செல்பேசி அடித்துக் கொண்டே இருக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் அவதூறு பேசி வசவும் அழைப்புகள் வருகின்றன. காரணம், அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை நிறுத்த வேண்டுமென நான் கூறியதுதான். இந்த அழைப்புகள் எந்த ஆச்சரியத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. இவர்கள் இப்படித்தான். இது வெறும் தொடக்கம்தான். புத்தர், பசவண்ணா, அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவம், பகுத்தறிவு, பரிவு கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் முதலமைச்சர் சித்தராமய்யா, சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் ஒரு வழக்கறிஞர், சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசினார். எந்த மதமும் வெறுப்பை கற்றுக் கொடுப்பதில்லை. சட்டம் படித்த ஒரு நபர் இப்படி கீழ்த்தரமாக செயல்பட்டதை நாம் கண்டிக்க வேண்டும். இத்தகைய போக்கை சகித்துக் கொள்ளக் கூடாது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது, சமூகத்தில் எப்படி அமைதி நிலவும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!