India

புதுச்சேரி... தொகுதிக்கு 30% வாக்காளர்களை கழகத்தில் இணைக்கவேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் !

புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் 30% வாக்காளர்களைக் கழக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இப்பணியை ஒருங்கிணைக்க ஜெகத்ரட்சகன் எம்.பி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடிப்பட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாசிச ஆதிக்கத்திலிருந்தும், அதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ.க. கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியின் ‘மண்-மொழி-மானம்’ காக்க, கழகத்தின் சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரை முன்னெடுக்கப்படும்.

புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் அவலங்களைச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களைக் கழக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.

இப்பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள் தலைமைக் கழகத்தால் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழகத்தின் மாநில – தொகுதி – வட்ட – ஊர்க்கிளை, உட்கிளை கழகச் செயலாளர்கள் என அனைவரும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் முழு மூச்சோடு இணைந்து பணியாற்றி, மாநிலத்தின் 30% வாக்காளர்களைக் கழக உறுப்பினராக்கிட வேண்டும் என்ற இலக்கை அடைந்திட வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: மீண்டும் மீண்டுமா... நாமக்கல்லிலும் தவறான தகவலை சொல்லி வசமாக சிக்கிய நடிகர் விஜய்... அது என்ன ?