புதிதாக அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய் தற்போது சனிக்கிழமை தோறும் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த கூட்டங்களில் அவர் தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருவது தற்போது அம்பலமாகி வருகிறது.
அந்த வகையில் இன்று நாமக்கல்லில் நடிகர் விஜய் பேசியபோது, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் அமைப்பதாக கூறியும், அதனை இன்னும் அமைக்கவில்லை என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை விமர்சித்தார்.
இந்த நிலையில், அவரின் இந்த விமர்சனமும் தவறானது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உண்மையில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் 06.09.2021 அன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, 10.05.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக நினைவு அரங்கத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைந்து நினைவரங்கம் திறக்கப்படவுள்ளது.
அதே போல முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை 2023ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் எதுவும் அறியாமல் நடிகர் விஜய் நாமக்கல்லில் விமர்சித்துள்ளார்.