India

தங்க நகைக்கடன் - புதிய விதிகளில் தளர்வு : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!

ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து தங்க நகை வாங்கி வருகிறார்கள். இதற்கு காரணம், தங்களுக்கு எப்போது பண நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போது தங்களிடம் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டு நெருக்கடிகளை சமாளிப்பார்கள். .

இந்தசூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு RBI புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும். இந்த அறிவிப்பு ஏழை எளிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து RBI-யின் இந்த புதிய அறிவிப்பிற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வனிகர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒன்றிய அரசு புதிய விதிகளில் தளர்வு ஏற்படுத்த RBI-க்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புக்கு பணிந்து நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. தங்க நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

Also Read: ”வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல” : ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்!