சிவங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வில், இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அதில் இருந்து பாசிகள், கண்ணாடி மணிகள், தந்த ஆட்டக்காய், சுடுமண் குழாய், பானைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கீழடி அகழாய்வு களத்தில் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றிய அரசு அசாம் மாநிலத்திற்கு இடம்மாற்றியது. இருந்தும் கீழடி அகழாய்வு குறித்து 2023 ஆம்ஆண்டு ஒன்றிய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதற்கு பின்னர், ”கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை” என ஒன்றிய அரசுக்கு அமர்நாத் இராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் ”கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை" ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல! “திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்று தான்” என்று ஒன்றிய அரசு சொல்கிறது.
நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார்.பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்?. அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.