India

”கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?” : மக்களவையில் தி.மு.க MP கேள்வி!

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டுகளில் குறைந்திருந்தபோதும் இந்தியாவில் எரிபொருள் விலையில் அது பிரதிபலிக்காதது ஏன் என்று நாடாளுமன்றத்தில் கோவை திமுக மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசு கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் விலைக்கும் நாட்டில் அதை விற்பனை செய்யும் விலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு நிலவுகிறது என்றும் அதற்கான காரணங்கள் என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் லாபம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளியிடப்பட்ட பெட்ரோலிய பத்திரங்களுக்கான தொகைக்கு செலுத்தப்படுகிறதா? அப்படியானால், இதுவரை பெட்ரோலிய பத்திரங்களுக்கு எவ்வளவு தொகை தீர்வு செய்யப்பட்டுள்ளது? தற்போதைய பெட்ரோலிய பத்திரங்களின் சுமை எவ்வளவு? என்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

இந்தியாவில் உள்நாடு, வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உண்மையா? அப்படியானால் அதற்கான காரணங்கள் என்ன? என்று நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கு தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் ஒன்றிய அரசு எடுத்த முன்முயற்சிகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காகவும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கேட்டுள்ளார்.

Also Read: ”இரக்கமற்ற ஒன்றிய அரசு” : வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திருச்சி சிவா MP!