India

மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்களில் தமிழ்நாடு உள்ளதா? -திமுக MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சரின் பதில் என்ன?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. அதே சமயம் மக்களுக்கு தேவையான முக்கிய கோரிக்கைகள் கேள்விகளும் ஒன்றிய அமைச்சர்களின் முன்வைக்கப்படுகிறது.

அந்த வகையில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா எனப்படும் MMLP (Multimodal Logistics Park) பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கண்டறியப்பட்ட இடங்கள், இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட நிதி, இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படும் தாக்கம், திட்டத்தின் செயல்திறனைக் கண்காணித்து மதிப்பிடுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் திமுக எம்.பி. கிரிராஜன் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இவற்றிற்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில், இந்தியா முழுவதும் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் லாஜிஸ்டிக் பூங்காக்களை அமைக்க 35 இடங்களை கண்டறிந்துள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை மேம்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த பூங்காக்கள் மற்றும் ஒருங்கிணைந்த மல்டி மாடல் கிளஸ்டர்களின் மேம்பாடு ஆகியவை அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (NHLML) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 35 MMLPகளில் அதிபட்சமாக மும்பை மற்றும் டெல்லியில் தலா 5 அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அமையவுள்ள MMLP-யானது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO), தேசிய நெடுஞ்சாலை சரக்குப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் (NHLML), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL), சென்னை துறைமுக ஆணையம் (ChPA) ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.641.92 கோடி செலவில் அமைய உள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

MMLP

இந்த தொகையில் TIDCO 7.8 சதவிகிதம், NHLML 40.18 சதவிகிதம், RVNL 26.00 சதவிகிதம், ChPA 26.02 சதவிகிதம் பங்களிப்பை வழங்க உள்ளதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதன்படி NHLML ரூ.257.90 கோடியும், TIDCO ரூ. 50 கோடியும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MMLPகளின் வளர்ச்சியில் மூலம் சாலை - ரயில் - சாலை இடையேயான தடையற்ற சரக்கு மாற்றத்துன் மூலம் போக்குவரத்து செலவைக் குறைத்தல், நவீன மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பின் மூலம் சரக்கு கையாளுகையின் செலவுகளை குறைத்தல், பெரிய கிடங்குகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் செலவுகளை குறைத்தல், போட்டித்தன்மை வாய்ந்த, நம்பகமான லாஜிஸ்டிக்கை தேர்ந்தெடுப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பதன் மூலமும், உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும் பயனடைதல் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பதாக அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு ஆகியவை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகள் சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தால் செய்யப்படுவதாகவும் திமுக எம்.பி. கிரிராஜனின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த MMLLPகளில் இடைநிலை சரக்கு பரிமாற்ற வசதி, கிடங்கு வசதி, ரயில்வே முனையம் மற்றும் இணை பாதை, சுங்க வசதி, கண்டெய்னர் டிப்போ, டிரக் பார்க்கிங் வசதி, அதிக அளவிலான பொருட்கள் சேமிப்புக் கூடம், திறந்தவெளி சேமிப்புக் கூடம், மதிப்பு கூட்டப்பட்ட சேவைக்கான வசதி, மின்சார வாகனங்கள் சார்ஜிங் வசதியுடன் கூடிய எரிபொருள் பம்ப்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆகிய வசதிகள் கிடைக்கும் என்பதும் ஒன்றிய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘நமக்கு நாமே’ திட்டத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு! : சட்டப்பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு தகவல்!