India

ஒன்றிய அரசின் ஏஜெண்டா ஆளுநர்? : உச்சநீதிமன்றம் கேள்வி!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் என்று தெரிவித்தார். ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற மசோதா மீது அவரே நீதிபதியாக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய நீதிபதிகள், மறு ஒப்புதலுக்காக மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா? என ஆளுநருக்கு ஆர்.என்.ரவிக்கு கேள்வி எழுப்பினர்.

மசோதா மீது முடிவெடுக்காமல் ஆளுநர் மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதற்கு விடை காண வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என ஆளுநர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவர்தானே? என்று நீதிபதிகள் வினவினர். அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதல் வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்? என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

மேலும் ஒன்றிய அரசின் ஏஜெண்டாக ஆளுநர் இருக்கிறார் என்ற வாதத்தில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. மாநில அரசால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும்போது, அதில் ஆளுநர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் அதன் மீது குடியரசுத் தலைவர் என்ன மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்? என்ற விளக்கத்தை அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: ”தி.மு.க முன்னெடுக்கும் போராட்டத்திற்கு சமாஜ்வாதி துணை நிற்கும்” : டெல்லியில் அகிலேஷ் உறுதி!