India
”கொள்ளையடிக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?”: ராணி ஸ்ரீகுமார் MP கேள்வி!
மக்களவையில் இன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆர்டிக்கல் 377 ன் படி வலியுறுத்தி பேசினார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”தென்காசியில் சில சிறுநிதி நிறுவனங்கள் (எம்.எப்.ஐக்கள்) மற்றும் தனியார் சுயஉதவி குழுக்கள் (எஸ்.எச்.ஜிக்கள்) ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடம் ஆபத்தான முறையில் சுரண்டுகின்றன. மேற்கண்ட இந்த நிறுவனங்கள் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில்லை. மாறாக கடன் வழங்குவது என்ற கோணத்தில் கொள்ளையடிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் தள்ளுகின்றது. இதுபோன்ற பிரச்சனைகளின் விளைவாக பாதிக்கப்படும் மக்கள் தங்களது குடும்பங்களை இடம்பெயர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல், சில நேரங்களில் நிதி நிறுவனங்களின் அழுத்தத்தால் தனிநபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் மிக சோகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
குறிப்பாக பாரம்பரியமாக பலருக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பீடி மற்றும் தீப்பெட்டித் தொழில்கள் கடுமையான சரிவைச் சந்திக்கும் பகுதிகளில் இந்த துயரம் என்பது மிகவும் கடுமையான ஒன்றாகும். தேவை குறைவாலும், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளாலும், இந்தத் தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கும் பரிதாபமான கட்டாயத்தில் உள்ளனர்.
இதுபோன்ற கடன் சுழற்சி அந்த குடும்பங்கள் மீது கடுமையான சமூக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடன் வழங்குபவர்களால் துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் இடைவிடாத மீட்பு உத்திகள் ஆகியவை கடன் வாங்குபவர்களுக்கு தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் வழிவகுக்கிறது.
எனவே இந்த இக்கட்டான நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்றிய அரசு உடனடியாக அவசரகால நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதில் முதலாவதாக, உள்ளூர் மொழிகளில் வழங்கப்படும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய விதிமுறைகளுடன், கடன் வழங்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த எம்.எப்.ஐக்கள் மற்றும் எஸ்.ஹெச்.ஜி ஆகிய நிறுவனங்கள் கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
கூடுதலாக, வட்டி விகிதங்களில் வரம்புகள் மற்றும் சுரண்டல் நடைமுறைகளுக்கு கடுமையான அபராதங்களை ஒன்றிய அரசு விதிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வாங்குபவர்கள் தங்கள் உரிமைகளை நன்கு புரிந்து கொள்ள நிதி கல்வியறிவு பிரச்சாரங்கள் மூலம் அதிகாரம் பெறவும் உரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?
-
“முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!