India
ஹத்ராஸ் கொடூரம் : “நாட்டில் பாபாக்களின் சந்தையை வளர விட கூடாது” : சஞ்சய் சிங் MP ஆவேசம்!
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. போலே பாபா என்பவர் தலைமையில் மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் ஒரே பகுதியிலிருந்து வெளியேற முயன்ற நிலையில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பல நூறுபேர் சிக்கிக்கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி இதுவரை சுமார் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கோர சம்பவத்துக்கு வெளியேறும் இடத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இவ்வளவு உயிரிழப்புக்கு மத்தியிலும் மூத்த அதிகாரிகள் யாரும் இந்த இடத்துக்கு நீண்ட மணி நேரமாக வரவே இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிரக்குகள், டெம்போக்கள் கொண்டு செல்லப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதோடு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், ஹத்ராஸ் மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவ பணியாளர்களும் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கோர சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து பாஜக அரசுக்கு கண்டனங்களும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்நாட்டில் எளிய மக்களின் உயிருக்கு மதிப்பே இல்லை. ஒருவர் தனது பாபா பஜாரை கட்டமைக்கிறார் என்றால் அவருக்கு இந்த ஒன்றிய அரசு எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. இந்த போக்கு ஹாத்ரஸில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே நீடிக்கிறது. அரியானாவில் பாலியல் குற்றவாளியாக உள்ள பாபா எப்போது வேண்டுமானலும் வெளியே வந்து செல்கிறார். அவரைக் கண்டு இந்த அரசு தலை வணங்குகிறது. இப்படி பாபாக்களின் சந்தையை நாட்டில் வளர விட்டால் ஹாத்ரஸ் போன்ற சம்பவத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!