India

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ் : பதஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் கண்டனம் !

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவ துறை அறிஞர்கள் அறிவித்தனர்.

அதோடு மட்டுமின்றி அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பக்கூடாது என பதாஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் இனி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

எனினும் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பாகின. இதனை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், "நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு, தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? ”என கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து பதாஞ்சலி நிறுவனம் சார்பில் மீண்டும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாங்கள் குருடர்கள் அல்ல, இந்த வழக்கில் தாராளமாக இருக்க விரும்பவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் , இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஏன் மீண்டும் பொய்யான செய்திகளை மக்களுக்கு வழங்கினீர்கள்? என பாபா ராம்தேவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து "சட்டம் அனைவருக்குமே ஒன்றுதான். நீங்கள் மூன்று முறை உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறியிருக்கிறீர்கள். முந்தைய உத்தரவுகள் எங்கள் பரிசீலனையில் இருக்கின்றன.என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு நீங்கள் ஒன்றும் அப்பாவி அல்ல' என்று விமர்சித்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: “நம் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது : பாஜக ஏன் வரவே கூடாது?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !