India

போதையில் சாலையில் பைக்கில் சென்றவரின் தலையில் தட்டிய இளைஞர்.. எதிர்பாராத வகையில் இறுதியில் நடந்த துயரம்!

புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையத்தை சேர்ந்தவர் விஷால் (25). பொறியியல் பட்டதாரியான இவருக்கு தந்தை இல்லை. தாயுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேர் கோபித்துக்கொண்டு லப்போர்தனே வீதி வழியாக காரில் சென்றுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்காக விஷால் தனது இருசக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளார்.

உயிரிழந்த விஷால்

இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த மோனிஷா என்ற பெண் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். எனவே அந்த பெண்ணின் கணவர் கார்த்திக் சங்கர், தம்பி ஹரிஹரன் மற்றும் அவர்களின் நண்பர்களான ரவிக்குமார், அரவிந்த், சூரியகுமார், முகேஷ் ஆகியோருக்கு மது விருந்து கொடுத்துள்ளார். இதில் மோனிஷாவை தவிர மற்றவர்கள் மது அருந்திவிட்டு லப்போர்த்தனே வீதியில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அந்த சமயத்தில் விஷால் தன் நண்பரின் கார் பின்னே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை கவனித்த அவர்கள், அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் விஷால் வேகமாக வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், அதில் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த விஷாலின் தலையை லேசாக தட்டியுள்ளார். இதில் விஷால் நிலை தடுமாறிய விஷால் அருகில் இருந்த மரத்தில் மோதி சட்டென்று கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட மோனிஷா மற்றும் குடிபோதையில் இருந்த அவரது நண்பர்கள், ஓடிச்சென்று அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சாலை விபத்தில் விஷால் கீழே விழுந்ததாக அனுமதித்தனர். அப்போது விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போக்குவரத்து போலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விஷால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும்போது அவரை அந்த கும்பலில் ஒருவரான முகேஷ் தலையில் லேசாக தட்டுவது பதிவாகி இருந்தது. இதனையடுத்து இந்த வழக்கானது ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் மோனிஷா மற்றும் ஒருவரை தவிர மீதியுள்ளவர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதுதொடர்பாக போலிசார் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் விஷால் இறந்த செய்தி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திடீரென ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விஷாலின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

Also Read: அமெரிக்காவை உலுக்கிய ‘பேய் வழக்கு’ : கொன்றது யார்? கடைசியில் நடந்தது என்ன?