India

நண்பன் அடையாளத்தை திருடி அரசு ஊழியராக இருந்த நபர்: 36 ஆண்டுக்குப் பின் மகனிடம் உண்மையை சொன்ன மனைவி!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் அனுப்புர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இங்கு உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 1984ம் ஆண்டு ஒப்பந்த கூலி தொழிலாளியாக தாதாபாய் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.இவரது நண்பர் நரசிங் தேவ்கான். இவர் தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிலக்கரிச் சுரங்கத்தை அரசே கையில் எடுத்து நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் அடையாள அட்டை வைத்துள்ளவர்களை அப்படியே அரசு ஊழியர்களாக பணியில் எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றித் தெரிந்து கொண்ட நரசிங் தேவ்கான், நண்பன் என்று கூடபார்க்காமல் தாதாபாயின் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களைத் திருடியுள்ளார். பிறகு நிலக்கரி சுரங்கத்தில் வேலைபார்த்தவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து அனைவரையும் அரசு ஊழியர்களாக மாநில அரசு மாற்றியது.

அப்போது அடையாள அட்டை இல்லாததால் தாதாபாயால் அரசு ஊழியராகச் சேரமுடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கே சென்றுவிட்டார். பின்னர் நண்பனிடம் இருந்து திருடப்பட்ட அட்டையைப் பயன்படுத்தி நான்தான் தாதாபாய் என கூறி அரசு ஊழியராக வேலையில் சேர்ந்துள்ளார் நரசிங் தேவ்கான்.

பின்னர் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. தான் மோசடி செய்து வேலையில் இருப்பது பற்றி மனைவியிடம் மட்டுமே உண்மையைக் கூறியுள்ளார். அவரும் இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இவருக்குப் பிறந்த குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளனர்.

இப்படி 36 ஆண்டுகள் அரசு வேலையில் கிடைத்த அனைத்து சலுகைகளையும் இவர் பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் நரசிங் தேவ்கான் உயிரிழந்தார். இதையடுத்து 10 ஆண்டுகளாக அவரது அவரது மனைவி ஓய்வூதியம் பணத்தை வாங்கி குடும்பத்தைக் கவனித்து வந்துவந்தார்.

இந்நிலையில்தான் மகனுடன் பேசும் போது திடீரென தந்தையின் உண்மையான முகத்தைத் தவறுதலாக உலறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் ஒருவரின் வாழ்க்கையைத் திருடியா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மன வேதனையடைந்துள்ளார்.

பின்னர் நரசிங் தேவ்கானின் மகன் கில்வான் தேவ்கான், சத்தீஸ்கருக்குச் சென்று தாதாபாய் ராமின் குடும்பத்தைத் தேடிப்பிடித்து நடந்த உண்மையைக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதை அடுத்து நரசிங் தேவ்கானின் மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய பணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி கூறும் தாதாபாயின் மகன் ஹக்கூர், "எனது தந்தையின் வாழ்க்கையைத் திருடியவர்கள் நன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அரசு வேலை கிடைக்காததால் சத்தீஸ்கர் திரும்பிய தாதாபாய் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து திருமணம் செய்து கொண்டு கடும் வறுமையில் வாழக்கையை நடத்தி வந்துள்ளார். தற்போது தாதாபாய்க்கு 75 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்" -இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆருடம் !