India

அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற தாய்- மகன் : கேரளாவில் நடந்த சுவாரஸ்யம் !

கேரளா மாநிலம் மல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் பிந்து. 42 வயதுடைய இவர், தனது கணவர் மற்றும் மகன் விவேக் (வயது 24) என்பவருடன் வசித்து வருகிறார். இவரது மகன் 10-ம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுப்பதற்காக புத்தகத்தை கையிலெடுத்தார்.

இவரது மகனின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட புத்தகம், இவரது வெற்றிக்கே அது வழிவகுத்துள்ளது. தனது மகனுக்கு சொல்லிக்கொடுத்து தானும் அதன் மூலம் அதிகமானவற்றை கற்றுக்கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அரசு தேர்வுக்கு தயாராகலாம் என்று எண்ணிய இவர், கேரள மாநிலத்தேர்வை எழுத விரும்பியுள்ளார்.

தனது விருப்பத்தை தனது கணவரிடம் தெரிவிக்க அவரும் மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். பிறகு ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க தொடங்கிய இவர், 3 முறை தேர்வெழுதி அதில் தோல்வியும் அடைந்தார். இருப்பினும் இடைவிடாத முயற்சியால் மீண்டும் படிக்க தொடங்கினார்.

இதனிடையே மகன் கல்லூரி படிக்க தொடங்கிய பிறகு அவரையும் தன்னுடன் பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் பிந்து. இதனால் இருவரும் ஒரே பயிற்சி மையத்தில் ஒரே தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் அண்மையில் கேரள மாநிலம் அரசுப்பணி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இருவரும் ஒன்றாக தேர்வெழுதினர். இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் இருவரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

இதில் பிந்து Last Grade Servants எனப்படும் தேர்வில் 92-வது தரவரிசையிலும், விவேக் Lower Divisional Clerk எனப்படும் தேர்வில் 38-வது தரவரிசையிலும் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர். தாயும் மகனும் ஒரே மையத்தில் பயிற்சி பெற்று, வெற்றிபெற்றுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சினிமா பாடலை மாற்றாததால் ஆத்திரம்.. பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கும்பல்.. நாகையில் பரபரப்பு !