India

“எப்போதும் குதிரை பேர அரசியல் நினைப்புதானா? - நிதியமைச்சரை வறுத்தெடுத்த இணையவாசிகள்” : பின்னணி என்ன?

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்” ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது. இதில் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் முடிந்தபின்னர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், கேசினோக்கள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் போன்றவற்றை குறித்து பேசினார்.

அப்போது குதிரைப் பந்தயம் (Horse Racing) என்ற வார்த்தைக்கு பதிலாக குதிரை பேரம் (அரசியல் பேரம்) என்று பொருள்படும் “Horse Trading” என்று தவறுதலாக குறிப்பிட்டார். உடனடியாக அவர் தனது தவற்றை உணர்ந்து “Horse Racing” எனக் குறிப்பிட்டார்.

ஆனால் குதிரை பேரம் என்ற வார்த்தையை பயன்படுத்திய நிர்மலா சீதாராமனின் வீடியோவை இணையவாசிகள் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு தனது அணியில் சேர்த்து புறவழியாக ஆட்சியில் இருந்து வருகிறது.

நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த அந்த தருணத்தில் கூட மகாராஷ்டிராவில் குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது. இதை முன்வைத்து பா.ஜ.க தலைவர்கள் எப்போதும் குதிரை பேர அரசியல் நினைப்பிலேயே இருப்பதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த விடியோவை பகிர்ந்துள்ள சிபிஐஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, “உண்மை வெளிவருகிறதா? குதிரை பேரத்திற்கும் ஜி.எஸ்.டி! தயவுசெய்து மேலே செல்லுங்கள்” என கூறியுள்ளார்.

Also Read: சாதனை மாநிலங்கள் பட்டியலில் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த தமிழ்நாடு - திமுகவை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி