India

மோடி அரசு குறித்து மாநிலங்களவையில் ஜோக் சொன்ன தி.மு.க எம்.பி.. அவையில் சிரிப்பலை!

“ஒன்றிய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை” என நிதி மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

ஒன்றிய அரசின் பட்ஜெட் கடந்த பிப்.,1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவைவில் நிறைவேறியது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி மசோதாவும் மக்களவைவில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், ஒன்றிய அரசால் தினக்கூலி செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ஒன்றிய பா.ஜ.க அரசின் பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை. இது ஒரு தோல்வியுற்ற பட்ஜெட்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி மக்களைக் காப்பாற்றிவிட்டதாக பா.ஜ.க சொல்கிறது. ஆனால், உணவின்றி உயிரிழக்கும் ஏழைகளைக் காப்பாற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ” எனக் குறிப்பிட்டு பா.ஜ.க அரசின் பட்ஜெட்டை கடுமையாகச் சாடினார்.

மேலும், பேசிய அவர், “ஃபேஸ்புக்கில் நான் ஒரு ஜோக்கை வாசித்தேன். ஒரு சிறுவன் தனது அப்பாவிடம் கேட்கிறான்.. “Dad, Is Jio a Government Company?” என. அதற்கு அவனது தந்தை பதில் சொல்கிறார் : “No My dear son, This Government is Jio's Company!” என பா.ஜ.க அரசின் கார்ப்பரேட் நல கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

Also Read: “மலைவாழ் மக்களையும் விட்டுவைக்காத பா.ஜ.க அரசு” : மாநிலங்களவையில் விளாசிய கனிமொழி சோமு எம்.பி!