இந்தியா

“மலைவாழ் மக்களையும் விட்டுவைக்காத பா.ஜ.க அரசு” : மாநிலங்களவையில் விளாசிய கனிமொழி சோமு எம்.பி!

“மலைவாழ் மக்களை இயற்கை சார்ந்த பகுதிகளில் இருந்து விரட்டியடித்துவிட்டு, சுயசார்புள்ளவர்களால அவர்களை இருக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம்?" என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியுள்ளார்.

“மலைவாழ் மக்களையும் விட்டுவைக்காத பா.ஜ.க அரசு” : மாநிலங்களவையில் விளாசிய கனிமொழி சோமு எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே உணவு, ஒரே நாடு ஒரே தேர்தல் இதெல்லாம் தேவையில்லை. ஒரே நாடு ஒரே வாழ்க்கை தரம் இதுதான் முக்கியம். அந்த வாழ்க்கைத் தரத்தை மலைவாழ் மக்களுக்கும் அளிக்கவேண்டும்” என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

மாநிலங்களவயில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான பட்ஜெட் விவாதத்தில் கலந்துகொண்ட தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு பேசுகையில், “ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்த ஆண்டில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்திற்கு 8,452 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது 12% அதிகம் என்றாலும், பல்வேறு நாட்டின் மாநிலங்களில் அதிகரித்துள்ள மலைவாழ் மக்களின் எண்ணிக்கைக்கேற்பவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்த நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.

மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு குறிப்பாக அவ்வின பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். ஆனால் சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பட்டியலின மற்றும் மலைவாழ் சமூக பெண் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி பெறுவதை உறுதிச்செய்யும் வகையில் “தேசிய பெண் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி திட்டம்” அமல்படுத்தப்பட்டது. இதன்படி, அப்பெண் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பில் சேரும்போது 3,000 ரூபாய் வைப்புநிதியாக அவர்கள் பெயரில் செலுத்தப்படும்.

திருமணம் ஆகாமல் பத்தாம் வகுப்பை அவர்கள் நிறைவுசெய்யும் பட்சத்தில் அவர்களுக்கு அந்தத் தொகை வட்டியுடன் அளிக்கப்படும். 2008ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை இந்த பட்ஜெட்டில் ரத்து செய்திருக்கிறது இந்த அரசு. இது அப்பெண்கள் மத்தியில் பள்ளி இடைநிற்றலை ஊக்கப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இது ஏற்புடையதல்ல.

கொரோனா காலத்தில் பொதுவாகவே பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் இந்த நேரத்தில், மலைவாழ் இனப் பெண்களின் கல்வி விஷயத்தில் அவர்களை மேலும் பின்னோக்கித் தள்ளும் வகையில் இத்திட்டத்தை ரத்து செய்திருப்பதை இந்த அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட்ட முழு ஊரடங்கு காரணமாக 6.33 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் தலைமையேற்று நடத்தும் இந்த வகை தொழில்நிறுவனங்களில் 78 சதவீதம் பணப்புழக்கும் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மலைவாழ் சமூக பெண்களின் தொழில் வாய்ப்பை மேலும் பாதிக்கும் வகையில் ஊரடங்கு காலத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகளை தளர்த்தி வனப்பகுதியில் சுரங்கம் உள்ளிட்ட தொழில்களுக்கான 11 திட்ட அனுமதியை இந்த அரசு வழங்கியுள்ளது. ஆனால் இதற்கு அந்த கிராம சபைகளின் ஒப்புதலையும் பெறவில்லை.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் பகுதிகளை சீரழிக்கும் முயற்சியை ஒருபுறம் செய்துவிட்டு, மலைவாழ் பகுதி இளைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 50 கோடி ரூபாய் மூலதன நிதி ஒதுக்கியும்; மலைப்பகுதி உற்பத்தி பொருட்கள் விறபனை மற்றும் பிற பகுதிகளுக்கு அவற்றை எடுத்துச் செல்லும் திட்டத்திற்காக 75 கோடி ரூபாய் ஒதுக்கியும் இந்த அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள இந்த இரண்டு திட்டங்களால் என்ன பயன்?

சுயதொழில் செய்துவந்த பெண்கள் குறிப்பாக மலைவாழ் சமூகப் பெண்கள் கொரோனா காலத்தில் தொழில் செய்வதை விட்டுவிட்டு தெருக்களில் சில்லறை வியாபாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தப் பெண்களின் முன்னேற்றத்திற்கு, மீண்டும் அவர்கள் தங்கள் சுயதொழிலை மீட்டெடுப்பதற்கு எந்த திட்டத்தையும் அரசு வகுக்கவில்லை” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “பட்டியலின இளைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 2017-18 ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபாயைக் கூட ஒரு இளைஞரும் பயன்படுத்த முன்வரவில்லை. இந்த நிலையில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியையாவது அந்த இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்துவதை இந்த அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும்.

நாடு முழுக்க ஏகைலயா உறைவிடப்பள்ளிகள் அமைக்கவும் 2006ம் ஆண்டு வரைக்குமாக சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மொத்தம் ஏழு பள்ளிகள் மட்டுமே அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மலைவாழ் பகுதிகளுக்கான தற்போதுள்ள சிறப்பு மத்திய உதவித் திட்டம் இந்த பட்ஜெட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தது 500 எண்ணிக்கை அல்லது 50 சதவீத மலைவாழ் மக்களை கொண்ட 36,428 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை ஆதர்ஷ் கிராமங்களாக தரம் உயர்த்தப்பட இருக்கின்றன. இந்த வரையறைக்குள் வரும் அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை இத்துறையின் அமைச்சரிடம் அறிய விரும்புகிறேன்.

இதுபோன்ற திட்டங்களை அறிவித்து அமல்படுத்தும் முன்பாக சம்பந்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய வல்லுனர் குழுவின் கருத்துக்களை இந்த அரசு கேட்டதா என்பதையும் அறிய விரும்புகிறேன். இதுபோன்ற திட்டங்களை அறிவித்து அமல்படுத்தும் முன்பாக சம்பந்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய வல்லுநர் குழுவின் கருத்துக்களை இந்த அரசு கேட்டதா என்பதை அறிய விரும்புகிறேன்.

அந்தவகையில் கருத்துகளை பெற்று ஏகலைவா உறவிடப்பள்ளிகளை நாடு முழுக்க உள்ள மலைவாழ் பகுதிகளில் அமைவது; உயர்நிலை கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய கால கல்வி உதவித் தொகையை இச்சமூக மாணவர்கள் பெறுவதை உறுதி செய்வது, அதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் மற்றும் உடனடி கவனம் செலுத்தவேண்டும்.

மலைப்பகுதிகளில் விளையும், தயாராகும் சிறு பொருட்களான வன மூலிகைகள், மரப் பிசின், தேன், பழங்கள் உள்ளிட்டவைதான் அப்பகுதி மக்களின் சுயதேவையை பூர்த்தி செய்து அவர்களை சுயசார்புள்ளவர்களாக இத்தனை காலம் வைத்திருந்தது.

இப்போது அந்த பொருட்களில் உறுபத்தி மற்றும் விற்பனை மாநில அரசுகள் மற்றும் தனியார் முதலாளிகள் வசம் சென்றுவிட்ட பிறகு அவர்களால் எப்படி சுயசார்புள்ளவர்களாக தொடர முடியும்? அவர்களின் இயற்கை சார்ந்த பகுதிகளில் இருந்து விரட்டியடித்துவிட்டு, சுயசார்புள்ளவர்களால அவர்களை இருக்கச் சொல்வது எந்தவகையில் சாத்தியம், நியாயம்?

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே உணவு, ஒரே நாடு ஒரே தேர்தல் இதெல்லாம் தேவையில்லை. ஒரே நாடு ஒரே வாழ்க்கை தரம் இதுதான் முக்கியம். அந்த வாழ்க்கைத் தரத்தை மலைவாழ் மக்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories