India

"ஜெயிலுக்கு போனா 3 வேளையும் சாப்பாடு கிடைக்கும்ல.. அதான்" : போலிஸாருக்கு ‘கிலி’ ஏற்படுத்திய கேரள இளைஞர்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த அய்லம் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிஜூ. இவருக்கு வேலை கிடைக்காததால் ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிங்கல் காவல்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலிஸ் ஜீப் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூன்று மாதங்கள் சிறையிலிருந்த பிஜூவுக்கு மூன்று வேளையும் உணவு கிடைத்துள்ளது. அவரை சில நாட்களுக்கு முன்பு போலிஸார் விடுதலை செய்தனர். இதனால் வெளியே வந்த அவருக்கு மீண்டும் உணவு கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

இதனால் மீண்டும் சிறைக்குச் செல்லலாம் என முடிவு செய்த பிஜூ அதே காவல்நிலையத்தில் இருந்த வாகனத்தின் மீது கல் வீசித் தாக்கியுள்ளார். இப்போது அவரிடம் போலிஸார் விசாரணை செய்தனர்.

இதில், வேலை தேடியும் கிடைக்காததால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்ததாகவும், இதனால் சிறைக்குச் சென்றால் உணவு கிடைக்கும் என்பதால் போலிஸ் வாகனத்தில் கல் வீசியதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் மீண்டும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “சேர் கூட இல்லை... தரையில் அமர்ந்து வாக்குப்பதிவு” : பீகாரில் பஞ்சாயத்துத் தேர்தலின்போது நடந்த அவலம்!