India

“வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்” : ஆசை வார்த்தை கூறி ரூ. 2.33 லட்சத்தை ‘அபேஸ்’ செய்த மோசடி கும்பல்!

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி வேலையில்லாமல் இருப்பவர்களை குறிவைத்து மோசடி சம்பவத்தை அரங்கேற்றுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூபாய் 2.33 லட்சத்தை மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை போரிவலி பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. 32 வயதாகும் குடும்பத் தலைவியான சகுந்தலாவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது. அதில், “வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்; அமேசானில் வேலை செய்யலாம்” என குறிப்பிடப்படிருந்தது.

இதனைப்பார்த்த சகுந்தலா அந்த எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு, தான் வேலையில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்போனில் பேசிய அந்த மர்ம நபர், எங்களுக்கு சில பொருட்கள் வாங்க நீங்கள் பணம் தந்தால் அதற்கு உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். நீங்கள் கொடுக்கும் பணத்தின் அளவை பொறுத்து கமிஷன் அதிகமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மர்ம நபர் ஒரு குறிப்பிட்ட இ-வேலட்டுக்கு பணம் அனுப்புமாறு கூறியிருக்கிறார். முதலில் அனுப்பிய 5,000 ரூபாய்க்கு 200 கமிஷனும், ரூ.5,000-ஐயும் அவர் வாங்கியுள்ளார். இதனையடுத்து அதிக கமிஷன் பெறவேண்டும் என்ற ஆசையில் ரூ.2.33 லட்சத்தை அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்தப் பணம் திரும்ப வரவில்லை. இதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “ராகவன் மட்டுமல்ல புகாரை வெளிகொண்டு வந்த மதனின் லட்சணமும் இதுதான்” : பாஜக-வை பார்த்து சிரிக்கும் மக்கள்!