India

“மோடி அரசின் ஒன்றிய அமைச்சரவையில் 33 பேர் மீது கிரிமினல் வழக்கு.. 90% பேர் கோடீஸ்வரர்கள்” : ATR தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் இந்த வேலையில், மோடி அரசின் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 42 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

நாடே கொரோனா நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் தேவையான என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் பதவி விலகியது கொரோனா பெருந்தொற்றை கையாண்டதில் மோடி அரசின் தோல்வியைக் காட்டுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், புதிதாகப் பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்களில் 33 பேர் மீது கொலை முயற்சி மற்றும் குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்) தெரிவித்துள்ளது. தேர்தலின் போது அளித்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில், 24 அமைச்சர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை முயற்சி, வழிபறி உள்ளிட்ட வழக்குள் நிலுவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், உள்துறை இணை அமைச்சராகப் பதவியேற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிஷித் பிரமாணி மீது கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அதேபோல், ஜான் பர்லா, பிரமானிக், பங்கஜ் சவுத்ரி, வி.முரளிதரன் ஆகிய ஒன்றிய அமைச்சர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.

அதேபோல், ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் 78 பேரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் 70 அமைச்சர்கள் சோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் அமைச்சர்கள் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கோயல்பியூஷ் வேத்பிரகாஷ், நாராயண் தாது ராணே, ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் 50 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் வைத்துள்ளனர் என ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்தால் அவர்கள் எப்படி மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துவார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “வரைவு ஒளிப்பதிவு மசோதா; திரைத்துறையின் கருத்துரிமையை ஒழிப்பதற்கு சதி செய்யும் மோடி அரசு”: முரசொலி சாடல்!