India

“இந்த நிலைக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்” : கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மைய தலைவர் திடீர் பதவி விலகல்!

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றை ஆராய்வதற்காக மத்திய அரசால் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஷாஹித் ஜமீல் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஷாஹித் ஜமீல் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் அதிக தாக்கத்திற்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என தனது கருத்தை அன்மையில் தெரிவித்திருந்தார். மேலும், ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் என்ற நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 4 லட்சத்திற்கு மேல் பதிவாகுகிறது. இதன் தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நாட்டில் கொரோனா 2ம் அலையின் தாக்குதல் பற்றியும், உருமாறிய வைரஸின் தொற்று வீரியம் குறித்தும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை அலட்சியம் செய்த மத்திய அரசு, கும்பமேளா உள்ளிட்ட மக்கள் பெருமளவு திரளும் விழாக்களுக்கு அனுமதி அளித்தது, தேர்தல் பிரச்சார கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதும் தான் இன்று இந்தியா எதிர்கொண்டுள்ள பெரும் துயரத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் ஷாஹித் ஜமீல் திடீரென பதவி விலகியிருக்கிறார். இவரின் விலகலுக்கு மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே காரணம் என கருதப்படுகிறது.

Also Read: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி - ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!