
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன.20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:
தமிழ்நாடு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது மொத்தம் 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. அதில் 48 ஒப்பந்தங்கள், அதாவது 70 சதவீத முதலீடுகள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மிக விரைவில் தங்களது உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ளன.
பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மீதமுள்ள ஒப்பந்தங்களையும் முழுமையான முதலீடுகளாக மாற்றுவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவையில் Lulu Mall ஏற்கனவே வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இது தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய கிளைகளைத் தொடங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னையில் மிகப்பெரிய அளவில் லூலூ மால் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது," என்று அமைச்சர் தெரிவித்தார்.






