தமிழ்நாடு

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஸ்டேடியத்தை எப்படி மறைப்பீர்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஆனால் முழு கட்டி முடிக்கப்பட்ட ஸ்டேடியத்தை எப்படி மறைப்பீர்கள் என அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஸ்டேடியத்தை எப்படி மறைப்பீர்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது அவர்கள் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும் தன்னுடைய தொகுதியில் mini stadium அமைத்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். நேற்றையதினம் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசும்போது, நம்முடைய திராவிட மாடல் அரசு, சட்டமன்றத் தொகுதிகள்தோறும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்களை கட்டவில்லை என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலை கூறியிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் மாநகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலுள்ள எல்லா பகுதிகளிலும், பரவலாக அனைத்து இடங்களிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் விரைவாக மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கொடுத்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்திருந்தார்கள். அதன்படி, தேவையான இடம் தயாராக இருந்த 82 சட்டமன்றத் தொகுதிகளில் ஸ்டேடியம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.


அதற்காக நிதியையும் ஒதுக்கிக் கொடுத்தார்கள். அரசு நிதியாக 2 கோடியே 50 இலட்சம் ரூபாயும், மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
50 இலட்சம் ரூபாயும் தர வேண்டும். மொத்தம் ரூ.3 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 80 ஸ்டேடியங்களில் அதற்கான வேலைகள் ஆரம்பித்தாலும், அதில் இதுவரைக்கும் 8 ஸ்டேடியங்கள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மீதம் இருக்கக்கூடிய ஸ்டேடியங்கள் எல்லாம் வருகின்ற பிப்ரவரி மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு, நிச்சயமாகத் திறக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவை தவிர, 59 தொகுதிகளில் ஏற்கெனவே இருந்த ஸ்டேடியங்களையெல்லாம் புனரமைப்பதற்காக--renovation செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். அதற்காக தனியாக ரூ.50 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 59 தொகுதிகளில் renovation work, 35 தொகுதிகளில் stadium renovation work செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டில் மீதம் இருக்கக்கூடிய 24 ஸ்டேடியங்களினுடைய renovation work செய்து முடிக்கப்படும். ஆக மொத்தம், 141 சட்டமன்றத் தொகுதிகளில் ஸ்டேடியங்கள் அமைப்பதற்கான பணிகளும், renovation works-ம் சேர்த்து முடிக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் ஸ்டேடியம் அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்யச் சொல்லி, அங்கிருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். 3 முதல் 5 ஏக்கர் வரை நிலம் கிடைத்தால், உடனே Stadium கட்டுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்கியிருக்கின்றோம். விளையாட்டு அரங்குகளைப் பொறுத்தவரை, அங்கே குறைந்தது 5 விளையாட்டு பயிற்சிகளுக்காக ஜிம் போன்ற வசதிகளெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். அந்த 5 விளையட்டுப் போட்டிகளில் ஜிம் compulsory.  அனைத்து mini stadiums-லும் ஜிம் கட்டாயம் என்பதை நாம் கடைபிடித்து வருகின்றோம். அதுமட்டுமல்ல, அந்தந்த தொகுதிகளில் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களைத் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதிகளில் எந்த விளையாட்டு பிரபலமாக இருக்கின்றதோ, எந்த விளையாட்டு வீரர்கள் அதிகமாக அதை பயன்படுத்துகிறார்களோ, அந்த வகையில் மீதம் 4 விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

முக்கியமான விஷயம், இந்த மினி ஸ்டேடியங்களைப் பொறுத்தவரை, எந்த பாரபட்சமும் பார்க்காமல், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்று எந்த வித்தியாசமும் காட்டாமல், அனைத்து தொகுதிகளிலும் இந்த முயற்சியை எடுத்துக்கொண்டு செய்து வருகின்றோம்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுடைய தொகுதியாக இருக்கட்டும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுடைய தொகுதிகளாக இருக்கட்டும், எல்லோருடைய தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய, முதலமைச்சர் அவர்களுடைய ஒரே நோக்கம்.

இந்த அவையிலே எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 62 பேர் இருக்கின்றார்கள். அந்த 62 சட்டமன்ற உறுப்பினர்களில், இன்றைக்கு 32 உறுப்பினர்களுடைய தொகுதிகளுக்கு ஸ்டேடியம் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேமாதிரி, 4 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், 3 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு மினி ஸ்டேடியம் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இங்கே இல்லை. ஒரு விஷயத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளில், 6 தொகுதிகளில் Renovation மற்றும் புதிய Stadium உட்பட 6 தொகுதிகளில் Mini Stadium வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். அவர்களின் முந்தைய ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் Sports Infrastructure போன்ற பணிகளுக்காக 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் இதுமாதிரி Sports Infrastructure-க்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்தம் 380 கோடி ரூபாய். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் Sports Infrastructure-க்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.380 கோடி.  ஆனால், நம்முடைய ஐந்தாண்டுகால ஆட்சியில் நம்முடைய திராவிட மாடல் அரசு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், infrastructure-க்காக மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.600 கோடி.

எனவே, ஐந்தாண்டுகால ஆட்சியில், பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியைவிட அதிகமான நிதியை ஒதுக்கி, அதிகமான infrastructures-ஐ உருவாக்கியிருக்கின்றோம். எனவே, சொல்வதை செய்கின்ற அரசாக நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும் சிறப்பாகச் செய்திருக்கிறது. ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள்? மதுரையில் 2017 ஆம் ஆண்டு AIIMS மருத்துவமனை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி, 2019 ஆம் ஆண்டு அதற்கான ஒற்றை செங்கல்லை வைத்துவிட்டு சென்றார்கள். இன்றுவரையில் அதை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 8 வருடங்களாகியும் அது முடிக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அப்போதைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய பாரத பிரதமர் அவர்களும் கூட்டாக அதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

இன்றைக்கும் அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இன்றையதினம்கூட, பிரதமர் அவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார். தேர்தல் வரப் போகிறது. இனி, எப்படியும் 10 முறையாவது வந்துவிடுவார். நிச்சயம் மீண்டும் அவரை மதுரைக்குக் கொண்டு சென்று, அந்த AIIMS மருத்துவமனையைக் காட்டி, இதற்கு என்றைக்குதான் விடிவுகாலம் பிறக்கும், என்றைக்குதான் இதனை திறப்பீர்கள் என்று நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், அண்ணன் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களும் இதனை கொண்டுசென்று, இதற்கொரு விடிவுகாலம் வந்தால் தமிழ்நாட்டு மக்கள் அதற்கு நன்றி சொல்வார்கள்.

விளையாட்டுத் துறையில் கடந்த  மூன்றாண்டுகளில் 141 இடங்களில் mini stadiums-ஐ நாங்கள் கட்டியிருக்கிறோம். ஆக, முழு பூசணிக்காயை நீங்கள் சோற்றில் மறைக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், முழுவதுமாகக் கட்டப்பட்ட stadium-ஐ எப்படி சோற்றில் மறைப்பீர்கள் என்பதை பதிய வைத்துக்கொண்டு, இதன் வாயிலாக அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இதனை பதிலாகக் கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்.

banner

Related Stories

Related Stories