India

“வேளாண் சட்டங்கள் வேண்டவே வேண்டாம்” : ஜெகன் மோகன் ஆதரவுடன் ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்!

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மோடி அரசைக் கண்டித்து பல வழிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கடந்த டிசம்பர் 8-ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த பேரணியையும் சீர்குலைக்க வன்முறையை ஏவியது மோடி அரசு. மோடி அரசின் மோசடிகளை முறியடித்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை எந்தவித தோய்வும் இல்லாமல் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் காலை முதலே பேருந்து ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று ஒரேநாளில் பஞ்சாபில் மட்டும் 120 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதேபோல், ஆந்திர மாநிலத்திலும் ஆளும் கட்சி ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மத்திய பா.ஜ.க அரசுடன் நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய சங்கங்களுக்கு ஆதரவாகவும், விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.

Also Read: 15 மாதங்கள் இந்தியாவில் இருந்து மோடி சாதனை : ரூ.8400 கோடி விமானத்தை தூசி தட்டி வங்கதேச பயணம்!