India

அலட்சியமாக இருந்தால் கொரோனா பாதிப்பு இன்னும் மோசமாகும் : மோடி அரசுக்கு AIIMS இயக்குநர் எச்சரிக்கை!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் கூட, இந்தியாவில் ஒரே நாளில் 46 ஆயிரத்து 951 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிதீவிரமாக இருக்கிறது.

இதனால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில், பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, முந்தைய பரவலை விடத் தீவிரமாக இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் உதாசீனப்படுத்துகின்றனர். இது தொற்றின் வேகத்தை அதிகரிக்கவே செய்யும்.

மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டு வந்த கொரோனா பரிசோதனைகள், தற்போது குறைந்துள்ளன. எனவே அரசுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளையும் வேகப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வராது என்று மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், முக கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர வேண்டும்.

கொரோனா வைரஸ் பல நாடுகளில் உருமாறியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உருமாறியிருக்கலாம். அது குறித்தான ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேலை இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாறியிருந்தால், இதன் விளைவு மிக மோசமாக இருக்கும். எனவே, அரசுகளும் மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் உக்கிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 46,951 பேருக்கு வைரஸ் தொற்று - வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!